×

பாஜ கூட்டணியால் கட்சி அங்கீகாரம் போச்சு… 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மாறும் பாமக: மே 11ம் தேதி நடக்கும் முழு நிலவு மாநாட்டில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ராமதாஸ்

விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த மக்களவை தேர்தலின்போது பாஜ கூட்டணியில் போட்டியிட்டு பாமக கட்சி அங்கீகாரம் இழந்த நிலையில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து பாமக முழுநிலவு மாநாட்டில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வட மாவட்டங்களில் செல்வாக்கை வைத்து கடந்த 1989ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாளி மக்கள் கட்சி தற்போது சரிவை நோக்கி செல்வதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கடந்த மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியில் போட்டியிட்டு 10 தொகுதிகளிலும் படுதோல்வியடைந்த பாமக மாநில கட்சி அங்கீகாரத்தையும் இழந்தது. பாமகவில் இருந்த அங்கீகாரம் போனதற்கு காரணம் கூட்டணி முடிவை தவறாக எடுத்துவிட்டதாக அப்போதே அன்புமணி மீது கட்சியினர், மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். 2004 மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. வாக்கு சதவீதமும் உயர்ந்தது. ஒன்றிய அமைச்சர் பதவியும் கிடைத்தது.

அதன்பிறகு அதிமுக, பாஜ கூட்டணியில் போட்டியிட்ட பாமகவிற்கு தொடர் சரிவு ஏற்பட்டது. கடந்த தேர்தலோடு பாமகவிற்கு தேர்தல் அங்கீகாரம் ரத்தானது. இதற்கு காரணமான பாஜ இருக்கும் கூட்டணியோடு சேரக்கூடாது என்பதில் ராமதாசுக்கு அக்கட்சியில் பல மூத்த நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம். குறிப்பாக, கடந்த மக்களவை தேர்தலில் பாமக போட்டியிட்ட 10 இடங்களில் தர்மபுரி தவிர்த்து மற்ற இடங்களில் டெபாசிட் இழந்தது.

மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜ கூட்டணி ஒப்பந்தத்தின்படி அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் தரவில்லை. அதற்கு பதிலாக சாதாரண ரயில்வே வாரியத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினராக பதவி அளிக்கப்பட்டது. இது மேலும் அக்கட்சியினரிடையே வெறுப்பை அதிகரித்தது. இதனைதொடர்ந்து நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ்தள பதிவில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ வழுவலை கால வகையினானே… என்று பாஜ கூட்டணியில் இருந்து விலகுவதுபோல பதிவை சூசகமாக பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, பாமக கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.

இதில் இளைஞரணி தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். இதனால் ஆத்திரமடைந்த அன்புமணி, மேடையிலேயே ராமதாசுடன் மோதலில் ஈடுபட்டார். இதையடுத்து இருவரும் தனித்தனியாக செயல்பட தொடங்கினர். இந்நிலையில் கடந்த மாதம் சென்னைக்கு வந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அதிமுகவை மிரட்டி கூட்டணியில் சேர்த்ததாக கூறப்பட்டது. அதைபோலவே பாமகவையும் கையோடு கூட்டணியில் சேர்வதற்கு பலவேலைகள் நடத்தப்பட்டதாம். ஆனால் இந்த முறை ராமதாசின் ராஜ தந்திரத்தால் அமித்ஷாவின் கனவு பலிக்காமல் போனது.

கூட்டணியில் சேரும் முயற்சியை முன்கூட்டியே தெரிந்த ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி பாஜவிற்கு செக் வைத்தார். இதனால் சில நாட்கள் தந்தை, மகனிடையே வார்த்தை மோதல் நீடித்தது. பின்னர், கட்சியின் மூத்த தலைவர்கள், குடும்பத்தினர் சமாதானம் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், ராமதாஸ் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துவிட்டார். தந்தை மகன் மோதலால் கட்சிக்குள் இரு பிரிவாக நிர்வாகிகள், தொண்டர்கள் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

இதனால் பாமகவில் பெரும் குழப்பம் ஏற்பட்ட நிலையில், தந்தை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செல்வதாக அன்புமணி அறிக்கை வெளியிட்டு, பாமக முழுநிலவு மாநாட்டிற்கு பந்தக்கால் நட்டு அதற்கான வேலையை தொடங்கினார். மாநாட்டுக்கு அனைவரும் வர வேண்டும் என்று அன்புமணியும், ராமதாசும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதனால் தந்தை, மகன் மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லையா என்று நிர்வாகிகள், தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் பாமகவின் இந்த மாநாடும் தேர்தல் கூட்டணி அறிவிப்புக்கான முக்கிய அம்சங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறுகையில், கடந்த மக்களவை தேர்தலில் மிரட்டி, உருட்டி எங்களை கூட்டணியில் சேரவைத்து கட்சி அங்கீகாரத்தை இழந்துள்ளோம். ஆனால் வரும் தேர்தலில் அப்படி நடக்காது.

கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியமைக்கும் கட்சியுடன்தான் கூட்டணி முடிவை ராமதாஸ் அறிவிப்பார். இழந்த கட்சி அங்கீகாரத்தை மீட்போம் என்று தெரிவித்துள்ளனர். எனவே, வரும் 11ம்தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நடைபெறும் பாமக முழுநிலவு மாநாட்டில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மற்றும் பாமகவின் நிலைப்பாடு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிக்கலாம் என்று தெரிவித்தனர்.

* தந்தையும், மகனும் தனித்தனி பாடல் வெளியீடு ‘ஐயாவா… அண்ணனா..’ என தொண்டர்கள் குழப்பம்
வரும் 11ம் தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலை அருகே வன்னியர் சங்கத்தின் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மாநாட்டை ஒட்டி, அக்கட்சியின் தலைவர் அன்புமணி வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ஒரு இடத்தில் மட்டுமே ராமதாசின் புகைப்படம் இடம்பெற்றிருந்த நிலையில், ‘அண்ணன் அன்புமணி அழைக்கிறார்’ என்று பாடல் தொடங்கியது.

இந்நிலையில், மாநாட்டையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ், தனியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்புமணியின் படம் ஒரு இடத்தில் கூட இடம்பெறாத நிலையில், ‘ஐயா அழைக்கிறார்’ என்றே அந்த பாடல் தொடங்குகிறது. இருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி தனித்தனியாக வீடியோ வெளியிட்டு இருப்பது, அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் நீடிப்பதாகவே கருதப்படுகிறது. இதனால் கட்சியின் நிர்வாகிகள் ராமதாசுக்கு பேனர் அடிப்பதா… அல்லது அன்புமணிக்கு பேனர் அடிப்பதா.. என குழம்பி தவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தொண்டர்களும் அண்ணனா.. ஐயாவா.. என குழப்பத்தில் உள்ளனர்.

The post பாஜ கூட்டணியால் கட்சி அங்கீகாரம் போச்சு… 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மாறும் பாமக: மே 11ம் தேதி நடக்கும் முழு நிலவு மாநாட்டில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Baja Coalition Pochu ,2026 Assembly Election ,Bamaka ,Ramadas ,Full Moon Conference ,VILUPURAM ,AKKADASI ,BALAKA PLENNUNAVU ,BALAKA ,PLENNUNAVU ,2026 ASSEMBLY ELECTIONS ,BAMAKA PARTY ,Bajaa Coalition Pochu ,Changes Coalition ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...