×

சேப்பாக்கத்தில் பஞ்சாப், சிஎஸ்கே மோதல்; பயத்துடன் ஆடினால் வெற்றி கிடைக்காது: சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹசி பேட்டி

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் 49வது போட்டியில் பஞ்சாப் மற்றும் சிஎஸ்கே அணி பலப்பரீட்சை நடத்துகிறது. கடைசியாக சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ஆடிய 4 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. இது குறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி பேசுகையில், ‘நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடந்த போட்டி வெகு நாட்களுக்கு பிறகு நான் ரசித்த மிக சிறந்த போட்டியாகும்.

அந்த போட்டியில் சூர்யவன்ஷி – ஜெய்ஸ்வால் கூட்டணியின் பேட்டிங் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. அந்த கூட்டணிக்கு பேட்டிங்கில் கொஞ்சம் கூட பயமே இல்லை. கடைசியாக ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டிங் ஆட செல்லும் போது, ஒட்டுமொத்த ஆஸ்திரேலியா அணியும் அவரது பேட்டிங்கை பார்க்க ஆர்வமாக காத்திருப்போம். அதுபோல் நேற்றைய ஆட்டத்தில் சூர்யவன்ஷி – ஜெய்ஸ்வால் ஆகியோரின் பேட்டிங்கை ஆர்வமுடன் கண்டு ரசித்தோம். கில்கிறிஸ்டை பார்க்கும் போது கிடைத்த அதே உணர்வு எனக்கு நேற்றும் கிடைத்தது.

கடந்த சில போட்டிகளில் கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் ஃபார்முக்கு வருகிறோம் என்று கருதுகிறேன். தவறு செய்துவிடுவோமோ என்ற பயத்துடனே எங்களது வீரர்கள் களத்தில் விளையாடுகின்றனர் . இது தான் கடந்த போட்டிகளில் நாங்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம். அப்படி விளையாடும் போது ஒருநாளும் சிறப்பாக செயல்பட முடியாது என்பதை எங்கள் வீரர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஐபிஎல் தொடரை பொறுத்த வரை இளம் வீரர்களை கண்டறிவதோடு அணியின் கடமை நின்றுவிடாது.

அந்த வீரரை மெருகேற்றி உயர் நிலையில் விளையாடுவதற்கு தயார் செய்வதும் அணி நிர்வாகத்தின் கைகளில் தான் உள்ளது. வலைப்பயிற்சியில் வீரர்களுக்கு எந்த அழுத்தமும் இருப்பதில்லை. எந்த ஷாட்டை எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். அதில் ஆட்டமிழந்தாலும் எந்த பிரச்சனையோ, இழப்புகளோ இல்லை. ஆனால் போட்டியின் போது அது சாத்தியமில்லை. தோனி தலைமையில் மீண்டும் சென்னை அணி களமிறங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த போட்டிகளை நினைத்து பார்த்து ஒன்றும் ஆகப் போவதில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம். என்று கூறினார்.

The post சேப்பாக்கத்தில் பஞ்சாப், சிஎஸ்கே மோதல்; பயத்துடன் ஆடினால் வெற்றி கிடைக்காது: சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹசி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Punjab ,CSK ,Chepauk ,Mike Hussey ,Chennai ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் 3வது டெஸ்ட்; கான்வே 150; லாதம் சதம்