×

ராணுவ பயிற்சி மையப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு மாடு

குன்னூர்: குன்னூர் ராணுவ பயிற்சி மையப்பகுதியில் நீண்ட நாட்களாக காலில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு மாட்டிற்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்காமல் இருப்பது வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பகல் நேரங்களிலேயே அப்பகுதியில் காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக உலா வர துவங்கியுள்ளது. இதனிடையே கட்டபெட்டு வனசரகத்திற்குட்பட்ட ஸ்டாப் காலேஜ் பகுதியில் கடந்த 3 வார காலமாக முன் காலில் அடிபட்ட நிலையில் கூட்டத்தில் உள்ள காட்டு மாடு ஒன்று சுற்றி வருகிறது. பந்துமை பகுதியில் இருந்து வந்த இந்த காட்டு மாடுகள், அங்குள்ள வனப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது காட்டு மாட்டின் முன்னங்காலில் இரும்பு துண்டு குத்தியுள்ளது.

இந்த சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு பிறகு அவ்வழியாக ரோந்து பணி மேற்கொண்ட வனக்காப்பாளரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை வனத்துறையினர் காட்டு மாட்டிற்கு சிகிச்சை அளிக்காமல் இருப்பது வன விலங்கு ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வனத்துறையினர் ராணுவ பயிற்சி மையப்பகுதியில் நீண்ட நாட்களாக காலில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு மாட்டிற்கு சிகிச்சையளிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ராணுவ பயிற்சி மையப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு மாடு appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Wellington Military Training College ,Coonoor, Nilgiris ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலால்...