×

சிந்து நதியில் ரத்த ஆறு ஓடுமா? இந்தியாவுக்கு வரத் தயாரா?: பிலாவல் பூட்டோவுக்கு ஒன்றிய அமைச்சர் கேள்வி

சூரத்: சிந்து நதியில் தண்ணீரை நிறுத்தினால் ரத்த ஆறு ஓடும் என்ற பிலாவல் பூட்டோவுக்கு தைரியம் இருந்தால் இந்தியாவுக்கு வரத்தயாரா என்று ஒன்றிய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் கேள்வி எழுப்பினார். பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, தற்போதைய ஜனாதிபதி ஆசிப்அலி சர்தார்ஜி தம்பதியின் மகன் பிலாவல் பூட்டோ கூறுகையில்,’ சிந்து நதியில் தண்ணீரை நிறுத்தினால் இந்தியர்களின் ரத்தம் ஆறாக ஓடும்’ என்று தெரிவித்தார். இதற்கு ஒன்றிய ஜல்சக்தித்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,’ தண்ணீர் தான் பலம் என்று மோடி கூறுகிறார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்று மோடி தெரிவித்துள்ளார். இதனால் பிலாவல் ஆத்திரமடைந்தார். ஆற்றில் தண்ணீர் வழங்கப்படாவிட்டால், இந்தியாவில் ரத்த ஆறு ஓடும் என்று அவர் கூறுகிறார்.

இதற்கெல்லாம் நாங்கள் பயப்படுவோமா? நான் அவரிடம் (பூட்டோ) சொல்கிறேன். சகோதரரே, உங்களுக்கு கொஞ்சம் தைரியம் இருந்தால், இங்கே வாருங்கள். இதுபோன்ற பேச்சுக்களைப் பற்றி கவலைப்படாமல், தண்ணீரை சேமிப்பது நமது பொறுப்பு’ என்று கூறினார். இன்னொரு ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ‘ பிலாவல் பூட்டோ மன நிலையைப் பரிசோதிக்கச் சொல்லுங்கள், என்ன மாதிரியான அறிக்கைகளை அவர் கொடுக்கிறார். போதும்… இதை இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம். இப்போது சில நாட்கள் பொறுங்கள்’ என்றார். காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கூறுகையில்,’ பிலாவல் கருத்து அதிர்ச்சிகரமானது. இந்தியர்களை யாரும் கொல்ல முடியாது என்பதை பாகிஸ்தானியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஏதாவது செய்தால், பதிலடிக்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். ரத்தம் ஓடினால், அது நம்மை விட அவர்களின் பக்கமே அதிகமாக பாயும்’ என்று கூறினார்.

 

The post சிந்து நதியில் ரத்த ஆறு ஓடுமா? இந்தியாவுக்கு வரத் தயாரா?: பிலாவல் பூட்டோவுக்கு ஒன்றிய அமைச்சர் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Indus River ,India ,Union Minister ,Bilawal Bhutto ,CR Patil ,Pahalgam attack ,
× RELATED இந்தியா முழுவதும் தங்கள் அட்டவணையில்...