×

மின்னணுத் திரை, விளம்பர அட்டை வைப்பதில் விதிகளை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம்: சட்டசபையில் சட்டமசோதா அறிமுகம்


சென்னை: சட்டசபையில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: விளம்பரங்களை காட்சிப்படுத்தும் முறை மற்றும் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்களை அகற்றும் முறை ஆகியவற்றிற்கான விதிகளை உருவாக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் விளம்பரப் பலகைகள், மின்னணுத்திரைகள் அல்லது விளம்பர அட்டைகள் வைப்பதை முறைப்படுத்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிவகை இல்லை. எனவே ஒரு புதிய அத்தியாயத்தை உட்புகுத்துவதன் மூலம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அவற்றை முறைப்படுத்த வழிவகை செய்வதற்காக, ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக இந்த மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது.

திருமணம், மதச் சடங்கு, பிறந்தநாள் அல்லது இறந்த நாள் குறித்த ஆண்டு விழா, அரசியல், மதம், வகுப்புவாத அமைப்பு, வணிக ஊக்குவிப்பு ஆகியவற்றின் கூட்டம் அல்லது மாநாடு தொடர்பான விளம்பரத்தை காட்சிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் பொது அல்லது தனியார் இடங்களில் மின்னணுத்திரைகள் (டிஜிட்டல் பேனர்) வைக்கப்படுகின்றன. கிராம ஊராட்சியில் அதுபோன்ற விளம்பர பலகையை எந்த இடத்திலும் வைப்பதற்கு, ஒவ்வொருவரும் தனது பெயரை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சிகள்) நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன் அதற்கான படிவத்தில் 15 நாட்களுக்கு முன்பு பதிவு செய்ய வேண்டும். அவரிடம் உரிமத்திற்காக கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். அதை அவர் ஆய்வு செய்து, ஆண்டொன்றுக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.15 ஆயிரத்திற்கு மிகாத கட்டணத்தை செலுத்தினால், நிபந்தனைகளுடன் உரிமத்தை வழங்கலாம்.

அவர் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யும் காரணங்களுக்காக உரிமம் வழங்குவதை மறுக்கலாம். வழங்கப்படும் உரிமம் ஒவ்வொன்றும் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதை மீண்டும் புதுப்பிக்கலாம். அந்த கட்டணத் தொகை, அந்த கிராம ஊராட்சியின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.அனுமதி காலம் முடிந்த பிறகு அதை நீக்கிவிட வேண்டும். மோசடி, தவறான சித்தரிப்பு அல்லது பொருள் விவரங்களை வெளியிட மறுத்து, அதன் மூலம் உரிமம் பெற்றிருந்தாலோ அல்லது விதிகளை மீறினாலோ உரிமத்தை இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்யலாம். உரிமம் பெறாமல் வைக்கப்படும் மின்னணுத்திரை, விளம்பர அட்டை போன்றவற்றை அறிவிப்பு கொடுக்காமலேயே வட்டார வளர்ச்சி அலுவலர் அகற்றி, அதை பறிமுதல் செய்து, அதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து வசூலிக்கலாம்.

சில விதிகளை மீறுவோருக்கும், சட்ட ரீதியான செயல்பாட்டை தடுப்பவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மின்னணுத் திரை, விளம்பர அட்டை வைப்பதில் விதிகளை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம்: சட்டசபையில் சட்டமசோதா அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Bill ,Chennai ,Minister ,I. Periyasamy ,Assembly ,Dinakaran ,
× RELATED ‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின்...