கோவை: கோவையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, மோட்டார், பம்புசெட் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதனை நம்பி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர். மோட்டார், பம்புசெட்கள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பம்ப் மோட்டார் துறையிலும் பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஸ்டார்ட் அப் இந்தியாவின் மெண்டர் ஜெய்பிரகாஷ் கூறியதாவது:
ஏஐ தொழில்நுட்பம் பம்ப் மோட்டார் இயந்திரங்களில் அதிர்வு, வெப்பம், மின் நுகர்வு உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பகுப்பாய்வு செய்து, இயந்திரங்கள் எப்போது பழுதடையக்கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும். இதனால் திடீர் பழுதுகள் குறைந்து, தொழிற்சாலைகளில் இடையூறு இல்லாமல் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற முடிகிறது. இத்தொழில் நுட்பம் மூலம் குறைந்த செலவில் அதிக பயனை பெற முடியும். சக்தி நுகர்வை கணித்து, தேவைக்கேற்ப இயந்திரங்கள் செயல்பட வழிவகுக்கிறது. ஒவ்வொரு பம்ப் மோட்டாரின் செயல்திறனை உயர் அளவில் பராமரிக்கிறது. பாதுகாப்பையும், தர உறுதியையும் அதிகரிக்கிறது.
ஓடிஎஸ் என்ற தயாராக கிடைக்கும் தொழில்நுட்ப தீர்வுகளை விரைவாக நிறுவ முடியும். குறைந்த செலவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உதவுகிறது. நிலைத்தன்மை மற்றும் பராமரிப்புக்கு நிறுவனர் நிறுவனங்களின் ஆதரவை வழங்குகிறது. ஏஐ மற்றும் ஓடிஎஸ் இரண்டும் இணைந்தால் பம்ப் மோட்டார் துறையில் ஒரு புதிய நிலை ஏற்படுகிறது. தானாகவே செயல்படும் பம்ப் மோட்டார் அமைப்புகள் மூலம் சிக்கனமான சக்தி நுகர்வு, பிழையின்றி, தரமான உற்பத்தி, பாதுகாப்பான தொழில்நுட்பம் மற்றும் அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படத்தக்க மாடல்கள் உள்ளிட்டவைகளை செய்ய முடியும்.
பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பம்பு மோட்டார் தொழிலில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன. இது இந்திய உற்பத்தித் துறையில் ஒரு புதிய ஏற்றத்தை உருவாக்கும். இந்த நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக, குறைந்த செலவில் அதிக செயல்திறனை அடைய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஏஐ தொழில்நுட்பத்தில் கோவை பம்புசெட்: பழுதை முன்கூட்டியே அறியலாம் appeared first on Dinakaran.
