×

66 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், 93 பேருக்கு பட்டா 180 நலவாழ்வு மையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள்

தூத்துக்குடி, ஏப் 11: தூத்துக்குடியில் 180 நலவாழ்வு மையங்களுக்கு மருத்துவ உபகரணங்களை கனிமொழி எம்பி வழங்கினார். மேலும் 66 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், 93 பேருக்கு பட்டாவும் வழங்கப்பட்டது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்பி கலந்து கொண்டு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி சுகாதார மாவட்டங்களில் உள்ள 180 நலவாழ்வு மையங்களுக்கான மருத்துவ உபகரணங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 66 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.67,18,800 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 93 பயனாளிகளுக்கு ரூ.54,02,670 மதிப்பிலான வரன்முறை பட்டாக்களை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: முதல்வர், எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழகத்தில் வாழும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு விண்ணப்பித்துள்ள 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. முதல்வர், தனது நேரடி பார்வையில் மாற்றுத் திறனாளிகளுக்கான துறையை நிர்வகித்து வருகிறார். அதேபோல மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளையும் தொடர்ந்து நிறைவேற்றி தருகிறார், என்றார்.

அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், நலவாழ்வு மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ கருவிகளை நல்ல முறையிலே பராமரித்து முறையாக பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் கடந்த மழை வெள்ளத்தின்போது இங்கு இருக்கக்கூடிய செவிலியர்கள் எந்த அளவிற்கு செயல்பட்டு நலவாழ்வு மையங்களில் இருக்கக்கூடிய மருத்துவக் கருவிகளை பாதுகாத்து வைத்தார்கள் என்பது தெரியும். மக்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற நோக்கில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட சுகாதார அலுவலரும் கலந்தாலோசித்து முக்கியமான மருத்துவ உபகரணங்களை தேர்வு செய்து வாங்கிக் கொடுத்துள்ளார்கள். இந்த மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிச்சயமாக மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும், என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, டிஆர்ஓ ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், தூத்துக்குடி ஆர்டிஓ பிரபு, மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், அரசு அலுவலர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post 66 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், 93 பேருக்கு பட்டா 180 நலவாழ்வு மையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Kanimozhi MP ,Thoothukudi Collectorate ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை