×

கோவையில் தவெக பூத் கமிட்டி கூட்டம் விஜய் பரபரப்பு பேச்சு

கோவை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கட்சி துவங்கியதும் முதல் மாநாட்டை நடத்திய அவர் அதன்பின், சென்னை பனையூரில் மட்டுமே கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி வந்தார். முதல்முறையாக கட்சி சார்ந்த நிகழ்ச்சியான பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் 2 நாள் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தார். அவருக்கு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர், திறந்த வேனில் விஜய் விமான நிலையத்தில் இருந்து கையசைத்து கொண்டே ரோடு ஷோவாக அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார்.

பின்னர், ஓட்டலில் ஓய்வு எடுத்த விஜய் மாலை 4 மணி அளவில் கார் மூலம் குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திற்கு புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து அங்கு நடந்த மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, விஜய் மற்றும் தொண்டர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டு இருந்த பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின், நடிகர் விஜய் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:
கோவை என்றாலும், கொங்கு பகுதி என்றாலும், இந்த மக்களுடைய, மண்ணுடைய மரியாதை தான் ஞாபகம் வரும். ஆட்சி அதிகாரம் என்றால் அது ஓட்டு சம்மந்தப்பட்டது தானே. நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைப்பது மக்களுக்காக தான். மக்கள் நலனுக்காக தான். இந்த பூத் கமிட்டி பயிற்சி பட்டறையில் மக்களிடம் எப்படி ஓட்டு வாங்க போகிறோம் என்பது மட்டும் பேசும் பட்டறை இல்லை. மக்களுடன், மக்களாக எப்படி ஒன்றிணைய போகிறோம் என்பது பற்றி பேசத்தான் இந்த பட்டறை. நமது கட்சி மீது மக்களிடம் நம்பிக்கையை கொண்டு வரப்போவது பூத் லெவல் ஏஜென்டாகிய நீங்கள் தான். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு போர் வீரருக்கு சமம். நாம் எதற்கு வந்துள்ளோம், ஏன் வந்துள்ளோம் என்பதை மக்களிடம் கொண்டு போங்க. அப்போது உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது என கண்டிப்பாக கேட்பார்கள். ஆனால் நீங்க யார், நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது எனக்கு தெரியும். நம்மிடம் மனதில் நேர்மை, கறைபடியாத கை, தெம்பு, லட்சியம், ஒற்றுமை, செயல்பட திறமை உள்ளது. களம் தயாராக உள்ளது சென்று கலக்குங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விஜய் பேச்சை மதிக்காத தொண்டர்கள்
கருத்தரங்கு மேடைக்கு விஜய் வந்ததும் கீழே தொண்டர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அரங்கின் ஒரு பகுதியில் மின்சார வயர்கள் சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் தொண்டர்கள் குவிந்ததால் மின் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து மேடையில் இருந்த விஜய் “அங்க நிறைய வயர்ஸ் போயிட்டு இருக்கு. உங்களோட டூ அவர்ஸ், திரி அவர்ஸ் இருக்கப்போகிறேன். கொஞ்சம் எல்லாம் பின்னாடி போயிட்டா நல்லா இருக்கும். சேப்டி ரீசனுக்காக சொல்கிறேன். பிளீஸ் புரிந்து கொள்ளுங்கள்’’ என்றார்.

ஆனாலும், விஜய்யின் பேச்சை கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் மின்சாரம் சென்ற வயர்களை தொண்டர்கள் காலால் மிதித்ததால் வயர்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து மின் விபத்து ஏற்பட்டது. இதில் வயர்கள் சேதமடைந்ததால் மேடையில் வைக்கப்பட்டிருந்த ஏசி மெசின்களுக்கு மின்சாரம் செல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் பவுன்சர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நெரிசலில் சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர். ஒரு சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏர்போர்ட்டில் ரகளை ; பயணிகள் தவிப்பு
கோவை விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நடிகர் விஜய்யை வரவேற்க 50 பேருக்கு மட்டுமே போலீசார் அனுமதி வழங்கினர். ஆனால், தடையை மீறி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமானோர் திரண்டனர். போலீசார் கலைந்து செல்லுமாறு எச்சரித்தும் கண்டுகொள்ளாமலும், விமான நிலைய விதிமுறைகளை மதிக்காமலும் ரகளையில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளை உள்ளே கொண்டு செல்வதற்காக ஏராளமான டிராலிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நேற்று விஜய்யை பார்க்க வந்த தொண்டர்கள் டிராலிகள் மீது ஏறி நின்றதால் ஏராளமான டிராலிகள் சேதமடைந்தன. இதனால் விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் உடைமைகளை எடுத்து செல்ல முடியாமல் தவித்தனர்.

இதே போல், விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் உடைத்து சேதப்படுத்தினர். கூட்ட நெரிசல் காரணமாக விமான நிலையத்திற்கு வந்த பயணிகளும், விமான நிலையத்தின் உள்ளே இருந்து வெளியே வர வேண்டிய பயணிகளும் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் பரிதவித்தனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் பெண்களிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. விஜய்யை பார்க்க தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசலில் சிக்கிய நூற்றுக்கணக்கானோர் தங்களது காலணிகளை தொலைத்துவிட்டு சென்றனர். இதனால், விமான நிலைய முன்பகுதியில் காலணிகளாக காட்சி அளித்தது.

ஏன் சேர்களை தூக்கறீங்க… மைக்கில் கத்திய ஆனந்த்
வாக்குசாவடி முகவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு தனியாக சேர்கள் போடப்பட்டிருந்தது. விஜய் வரும் வரை சேர்களில் அமைதியாக இருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜய் வருவதை அறிந்து சேர்களை தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு ஆரவாரம் செய்தனர். இதை மேடையில் இருந்து கவனித்த கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கோபமடைந்து மைக்கில் கடுமையாக நிர்வாகிகளை பார்த்து பேசினார். சேர்களை முதலில் கீழே வையுங்க, ஏன் சேர்களை எடுக்கறீங்க. எதுக்கு தூக்கறீங்க. என்ன காரணம். வையுங்க முதலில் என டென்சனில் பேசியதையே திரும்ப திரும்ப பேசிக்கொண்டிருந்தார். ஆனாலும் அவரது பேச்சை யாரும் கண்டுகொள்ளவில்லை.

கல்லூரி கதவு உடைப்பு:மோதல்
பூத் கமிட்டி கருத்தரங்கம் நடந்த தனியார் கல்லூரிக்குள் பாஸ் இருப்பவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒரு கட்டத்திற்கு பிறகு பாஸ் இல்லாமல் வெளியே நின்றிருந்த தொண்டர்கள் கல்லூரி வாயில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர். இதேபோல், சிலர் மரத்தின் மீது ஏறி கல்லூரி வளாகத்திற்குள் குதித்தனர்.

பூத் கமிட்டி உறுப்பினர்களாக சிறுவர், சிறுமிகள்
பூத் கமிட்டி உறுப்பினர்கள் என்பவர் வாக்குச்சாவடிகளுக்குள் பணியாற்றுபவர்கள். 18 வயது நிரம்பி இருந்தால் மட்டுமே இவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டு, வாக்குச்சாவடிகளுக்குள் அனுமதிக்கப்படுவர். தவெகவின் முதல் பூத் கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. ஆனால் பூத் கமிட்டி உறுப்பினர்கள் முறையாக நியமிக்காததால், கருத்தரங்கில் கூட்டத்தை காட்ட 18 வயது நிரம்பாத சிறுவர்- சிறுமிகள் ஏராளமானோருக்கு பாஸ் வழங்கி உள்ளே அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் நிர்வாகிகளின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களுக்கு வேண்டியவர்கள் என புகார் எழுந்தது.

விபத்தில் சிக்கிய தொண்டர்கள்
பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக விஜய் ஓட்டலில் இருந்து புறப்பட்டு அவிநாசி சாலை வழியாக சென்றார். அப்போது விஜய்யின் காருக்கு பின் தொண்டர்கள் பின் தொடர்ந்து இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். கைகளில் கொடிகளை பிடித்துக்கொண்டும், தொடர்ந்து ஹாரன்களை அடித்துக்கொண்டும் அதிவேகத்தில் பறந்தனர். அப்போது பைக்கில் சென்ற தொண்டர்கள் அடுத்தடுத்து பைக்கில் இருந்து தவறி விழுந்தனர். இதை கண்ட பொதுமக்கள் சாலையில் விழுந்து கிடந்த தொண்டர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மரத்தில் இருந்து அனில் போல் தாவிய தொண்டர் விஜய் வேன் சேதம்
விஜய்யை பார்க்க சாலை ஓரங்களில் கூடி இருந்த ரசிகர்கள் அவரது வேன் வந்ததும் அதன் மீது பாய்ந்து ஏறினர். சிலர் விஜய் வந்த வேன் கண்ணாடியை பலமாக தட்டினர். மரத்தின் மீது நின்றிருந்த சிலர் விஜய்யை பார்த்ததும் அனில் போல் வேன் மீது தாவி குதித்தனர். இதனால் அவரது வேன் சேதம் அடைந்தது. இதையடுத்து விஜய் மாற்று வாகனத்தில் பூத் கமிட்டி நடைபெறும் இடத்திற்கு சென்றார்.

புஸ்ஸி ஆனந்த் காயம்
பூத் கமிட்டி கூட்டத்துக்கு பாஸ் உள்ளவர்களையும் அனுமதிக்கவில்லை என நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேரிகாட் மேல் ஏறி நின்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொண்டர்கள் அவரையும் தள்ளி விட்டனர். இதில், புஸ்ஸி ஆனந்த் தடுமாறி கீழே விழுந்ததில் அவரது பேண்ட் கிழிந்து காலில் காயம் ஏற்பட்டது.

The post கோவையில் தவெக பூத் கமிட்டி கூட்டம் விஜய் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Vijay ,Daveka Booth Committee ,Goa ,TAMIL ZHAKA SUCCESS CLUB ,Panaiur, Chennai ,Daveka Booth Committee Meeting ,Vijay Bharappu ,Dinakaran ,
× RELATED கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி...