சென்னை: பாஜவின் எடுபிடி ஏஜென்டாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். அவரை ஆளுநர் அலுவலகத்தில் வைத்துக்கொள்ளாமல் பாஜ அலுவலகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் என வைகோ சாடினார். சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்தும், ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க வலியுறுத்தியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் போப் பிரான்சிஸ் மறைவிற்கும், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: பாஜவின் எடுபிடி ஏஜன்டாக ஆர்.என்.ரவி செயல்படுகிறார். அவரை ஆளுநர் அலுவலகத்தில் இல்லாமல் பாஜ அலுவலகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உச்ச நீதி மன்ற தீர்ப்பின் மூலம் மூக்கு உடைக்கப்பட்ட பின்பும் கூட துணை வேந்தர் மாநாட்டை நடத்துகிறார் ஆளுநர். இந்த மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் கலந்து கொண்டிருக்க கூடாது. திராவிட இயக்கம் என்பது அனைத்து சிறுபான்மையின மக்களை காப்பாற்றும் இயக்கம். எனவே சிறுபான்மையினருக்கு கவலை வேண்டாம். காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை மத பிரச்னையாக மாற்ற நினைக்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல். அதை ஒரு காலமும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு பேசினார்.
The post பாஜவின் எடுபிடி ஏஜென்டாக ஆர்.என்.ரவி செயல்படுகிறார்: வைகோ பேச்சு appeared first on Dinakaran.
