×

மதுரை, திருச்சி உள்ளிட்ட 5 இடங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பறக்கும் படைகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:
* கடலோர மாவட்டங்களான கடலூர் மற்றும் தூத்துக்குடியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உயிர்க் கேடயங்கள் உருவாக்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக நாட்டு மரங்கள், அலையாத்தி மரங்கள் போன்றவை நடவு செய்யப்பட்டு கடலோர மீள்தன்மையை மேம்படுத்தவும், வாழ்வாதாரத்தை ஆதரிக்கவும், கரிமத் தேக்கத்திற்கு பங்களிக்கவும் மற்றும் ஒரு நிலையான கடலோர இடையகத்தை உருவாக்கவும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* மாணவர்களிடையே காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பசுமைப் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்திற்கெதிரான தழுவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிகளில் பசுமை உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். பசுமைப் பள்ளிகள் திட்டத்தின் வாயிலாக, பள்ளிகளில் சூரிய ஒளி ஆற்றல் பயன்பாடு மூலம் மின் விளக்குகள், பம்புகள், ஆழ்துளைக் கிணறுகள், மழை நீர் சேகரிப்பு அமைப்புகள், உர உற்பத்தி, காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் மற்றும் பழ மரங்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, நெகிழி இல்லா சூழல் உருவாக்கப்படும்.
* சுற்றுச்சூழல் விருதுகள் ஆண்டுதோறும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு பிரிவுகளில் 10 விருதுகள் வழங்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பரிசுத் தொகை முதல் பரிசு ரூ.20,000லிருந்து ரூ.50,000ஆகவும், இரண்டாம் பரிசு ரூ.15,000லிருந்து ரூ.30,000ஆகவும், மூன்றாம் பரிசு ரூ.10,000லிருந்து ரூ.20,000ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த விருதுகளை வழங்க ரூ.4.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* கடலுக்கு செல்லும் நெகிழி கழிவுகளை தடுக்கும் வகையில், சென்னை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய முக்கிய கடலோர மாவட்டங்களில் ரூ.1 கோடி மதிப்பில் வள மீட்பு மையங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* கோயம்பேடு காய்கறி, பழ, மற்றும் பூ வணிக வளாக சந்தையினை கார்பன் நிகர பூஜ்ய சந்தையை உருவாக்க, சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இம்மாதிரியான ஆய்வுகள், மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் சந்தைகளிலும் ரூ.1.50 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
* மதுரை, திருச்சி, கடலூர், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 இடங்களில் ரூ.2.35 கோடி செலவில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய ‘பறக்கும் படைகள்’ நிறுவப்படும்.

The post மதுரை, திருச்சி உள்ளிட்ட 5 இடங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பறக்கும் படைகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Pollution Control Board ,Madurai, Trichy ,Minister ,Thangam Thennarasu ,Chennai ,Legislative Assembly ,Cuddalore ,Thoothukudi ,Madurai, ,Trichy ,Dinakaran ,
× RELATED மூணாறில் இரவில் வெப்பநிலை மைனஸ் 1...