×

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் விடுபட்டவர்கள் வரும் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஆகிய மானிக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு திருச்செங்கோடு ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) பேசியதாவது: கலைஞர் உரிமைத் தொகை இன்றைக்கு, 1 கோடியே 16 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. மீதம் உள்ள பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை, எனக்கு மட்டுமல்ல, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு பொதுவான கோரிக்கையாக இருக்கிறது. இதற்கு முன்பே சட்டமன்றப் பேரவையில் ‘அதுகுறித்து பரிசீலிக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், மீதமுள்ள தகுதியான பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகையை வழங்க முதல்வர் முன்வர வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: உறுப்பினர் ஈஸ்வரன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே மாதந்தோறும் ரூ.1000 வழங்கக் கூடிய இந்த திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு அது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தகுதிவாய்ந்த எல்லோருக்கும் அது வழங்கப்படுகிறது. ஆனால், இன்னும் இதில் விடுபட்டிருக்கக் கூடியவர்களுக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் அரசாங்கத்தின் கவனத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, இந்த அவையிலும் அது எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு, மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின்கீழ் பொது மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை உடனடியாக நிறைவேற்றுகிற பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். அந்த பணியைப் பொறுத்தவரையில், வரும் ஜூன் மாதம், 4ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் கோரிக்கைகளை கேட்கக்கூடிய பணிகளை நாங்கள் தொடங்க இருக்கிறோம். அந்த பணி 9 ஆயிரம் இடங்களில் நடைபெற இருக்கிறது. அப்படி நடைபெறுகிறபோது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் விடுபட்டிருக்கிறதோ, அவர்கள் முறையாக விண்ணப்பித்தால் நிச்சயமாக விரைவில் அவர்களுக்கும் வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.

* பேரவையில் இன்று…
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி-நேரம் எடுத்துக்கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், நிதித்துறை, ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும் ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். விவாதத்துக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் பதில் அளித்து பேசி, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள்.

* ‘நீங்கள் மணியடித்தால் நான் வெளியில் ஓடிவிடுவேன்’ அதிமுக எம்எல்ஏ பேச்சு: சபாநாயகர் பதிலால் அவையில் சிரிப்பலை
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிக்கும் மற்றும் வர்த்தகர் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேச்சை தொடங்கும் போது சூலூர் வி.பி.கந்தசாமி (அதிமுக) பேசுகையில், “காலையில் இருந்து பள்ளி, பள்ளி என்று பேசிய காரணத்தால், நீங்கள் மணி அடித்தீர்கள் என்றால், நான் வெளியில் ஓடிவிடுவேன். ஏனெனில், நானும் பள்ளி மாணவனாக இருந்தவன். எனவே, நீங்கள் மணியடிக்காமல் எனக்கு அதிக நேரம் வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். அப்போது சபாநாயகர் அப்பாவு “அப்படியானால், நீங்கள் பள்ளிக்கூடத்திலும் அந்தளவிற்கு சேட்டை செய்திருக்கிறீர்கள்” என்றார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து வி.பி.கந்தசாமி, “நீங்கள் ஆசிரியர்; நான் மாணவனாக இருந்தேன்” என்றார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu Legislative Assembly ,Industrial Investment Promotion and Commerce Department ,Information Technology ,
× RELATED பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291...