×

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்.பி.ராஜா ஆற்றிய பதிலுரை!!

சென்னை : தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.டிஆர்.பி.ராஜா அவர்களின் 2025-2026-ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய மானியக் கோரிக்கை – பதிலுரை :

வடக்கை தெற்கின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் 22/02/1959 அன்று தனது Home Land இதழின் துணைத்தலையங்கத்தில் It is an economic tenet, pure and simple, there should not be concentration of industries in a particular region alone- industries ought to be spread out; if not there would be imbalanceஇவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.அதாவது, தொழில்கள் ஒரு பகுதிக்குள் மட்டும் குவியக்கூடாது. அவை சமமாக பரவவேண்டும். இல்லையெனில் சமநிலை இழப்பு தவிர்க்க இயலாததாக ஆகிவிடும். பேரறிஞர் அண்ணா அவர்களின் இந்த தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த தலைவர் கலைஞர் அவர்களின் வழியில், ஆட்சி நடத்தும் திராவிடநாயகன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில்தான் நம் தமிழ்நாடு, பரவலாக்கப்பட்ட வளர்ச்சியைப் பெற்று, நாட்டிலேயே தொழில்வளர்ச்சியிலும், தொழிலாளர் நலனிலும் முதன்மை மாநிலமாக வான் உயர உயர்ந்து நிற்கின்றது.மற்ற மாநிலம் எல்லாம் தொழில் முதலீடுகளை மட்டுமே தேடி போவார்கள். ஆனால் நமது திராவிட நாயகன் மட்டும்தான் அந்த முதலீட்டின் மூலம் எந்தப்பகுதிக்கு வளர்ச்சி கிடைக்கும், யார் யாருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை இந்த முதலீடு எப்படி சீர் செய்யும் என்பதையும் சிந்தித்து செயல்படுகிறார்.

தொழில்துறையை தமிழ்நாட்டிற்கு வருமானம் சம்பாதித்து கொடுக்கும் ஒரு துறையாக மட்டும் பார்ப்பதில்லை. ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் கருவியாகத் தான் அவர் பார்க்கிறார்.ஆகையால் தான் முதலமைச்சர் அவர்களின் மனதுக்கு மிகவும் நெருங்கிய ஒரு துறையாக, அவர் அலங்கரித்த அதிகமான மேடைகள் தொழிற்துறை மேடையாகவே அமைந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் அவர்கள் Guidance நிறுவனத்திற்கு வந்திருந்தார். அப்போது, 10 லட்சம் கோடி ரூபாய் இலக்கை எட்டிவிட்டோம் என்று நாங்கள் பெருமையாக மார்தட்டி கொண்டிருந்தபோது அவர்கள் ஒரு பேனாவை எடுத்து 50 லட்சம் வேலை வாய்ப்புகள் நமது இலக்கு என்று எழுதிவிட்டு சென்றார். இன்றளவும் அந்த அலுவலகத்தின் சுவற்றில் 15 அடி நீளத்திற்கு எழுதப்பட்ட 10 லட்சம் கோடி ரூபாய் என்ற அந்த எண் பெரியதாகத் தெரியாமல், வெறும் 15 Cm-க்கு முதலமைச்சர் அவர்கள் கைப்பட எழுதிய 50 லட்சம் வேலை வாய்ப்புகள் நமது இலக்கு என்பதுதான் எங்கள் கண்ணில் பெரிதாகத் தெரிகிறது. //ஆகவே தான், அதுவே இந்த துறையின் இலக்காகவும் மாறியுள்ளது.//

முதலமைச்சர் அவர்களின் 1 Trillion டாலர் என்ற இலக்கை அடைய தமிழகத்திலுள்ள அனைத்து துறைகளும் இணைந்து செயல்படவேண்டும். இதில் தொழில்துறை முக்கிய பங்காற்றவேண்டும். இந்த நோக்கத்தோடுதான் அனுதினமும் அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்பட்டதால் தான், சமீபத்தில் ஒன்றிய அரசின் புள்ளியியல் துறையால் வெளியிடப்பட்ட இந்திய அளவிலான பொருளாதார வளர்ச்சி குறியீடுகளில், ஒன்றிய அரசின் பல்வேறு இடையூறுகளுக்கு இடையேயும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைவிடவும், 9.69 விழுக்காடு என்கிற வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்து, இந்த நாட்டின் முதன்மை மாநிலமாக கம்பீரமாக உதயமாகி நிற்கின்றது நமது திராவிடமாடல் அரசு.திராவிடமாடல் ஆட்சியின் இந்த 4 ஆண்டுகால தொழில்துறை சாதனைகளுக்கு எனது அருமை அண்ணன் நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு அவர்கள் மகத்தான அடித்தளமிட்டு தந்தார். இந்நேரத்திலே அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

முதலமைச்சர் அவர்களின் முயற்சியினால் தான் தமிழ்நாட்டின் தொழில் வளமும் முதலீடுகளில் தரமும்-எண்ணிக்கையும் மளமளவென உயர்ந்து வருகிறது. Annual Survey of Industries 2022-2023 அறிக்கையின்படி 27.74 லட்சம் தொழிலாளர்களை கொண்டு உற்பத்தித்துறையில் இந்தியாவில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு உற்பத்தி துறையில் (manufacturing)மட்டுமல்லாமல் சேவை துறையிலும் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.எனவே தான்(NASSCOMM ZINNOV Data படி உலகளாவிய திறன்மையங்களில் (GCC-ல்). கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 94,121 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன இதன் மூலம் இந்திய அளவில் உயர்தர வேலை வாய்ப்பு வளர்ச்சியில் முதல் இடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு.இப்படி உற்பத்தி, சேவை என்று இரண்டிலும் நம்பர் ஒன் மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு.இதைதான் Columbia, Yale, John Hopkins போன்ற உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் அரசியல் மற்றும் சமூகவியல் துறைகளில் பேராசிரியராக இருக்கும் திரு. கிருஸ்டோபர் ஜாபர்லாட் அவர்கள் சமீபத்தில் The Wire ஊடகத்திற்கு தந்த பேட்டியிலும் தெரிவித்துள்ளார்.

“It is interesting to see that if there is a model in India today, it is Tamil Nadu. Here is a state that almost eradicated poverty, industrialised at a high pace, and where services are taking over from industry.”“பொருளாதார வளர்ச்சியில் இன்று இந்தியாவிற்காக ஒருமாடல் இருக்க வேண்டும் என்றால் அது தமிழ்நாடு மாடலாகத்தான் இருக்க வேண்டும். தமிழ்நாடு மட்டும் தான் ஏறத்தாழ வறுமையை ஒழித்துவிட்டது” என்று அவர் கூறுகிறார்.
சேவை மற்றும் உற்பத்தி இரண்டும் இணைந்து தொழில்துறை மிகப் பெரிய பாய்ச்சலோடு வளர்ந்து கொண்டு இருக்கிறது.”பேரவைத் தலைவர் அவர்களே உலகமே வியந்து பார்க்கும் இந்த வளர்ச்சி எப்படி கிடைத்தது. கடந்த 2016-2021 வரையிலான 5 ஆண்டுகளில் இருந்த Negative sentimentஐ சரி செய்து Covid-ல் இருந்த பொருளாதார வீழ்ச்சியையும் தாண்டி ஒரு Positive trend-ஐ உருவாக்கி ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப் போல தமிழ்நாட்டை மீண்டெழச் செய்திருக்கிறார் நமது முதலமைச்சர் அவர்கள்.முதலில் தமிழகத்தில் ஒரு நிலையான உறுதியான ஆட்சி அமைந்தது. முதலமைச்சர் அவர்களின் திறன் மீது முதலீட்டாளர்கள் மிகப் பெரிய நம்பிக்கை வைத்தார்கள். ஆட்சி அமைந்தவுடன் முதலமைச்சர் அவர்களின் கொள்கைகளை புரிந்து கொண்ட உலக முதலீட்டாளர்கள் மனதில் தமிழகத்தின் மீதான அவர்களின் பார்வை சாதகமாக மாறியது.

முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தின் மீது மீண்டும் நம்பிக்கை பிறந்தது. முதல்கட்டமாக உலகின் சிறந்த வல்லுநர்களைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்தார். பல்வேறு முதலீட்டாளர்கள் சந்திப்புகளை நடத்தி பணிகளை முடுக்கி விட்டார். 2021-2023ஆம் ஆண்டுகளில் 5 மினி investment conclave’s களை நடத்தினார்.இப்படி 2023-ம் ஆண்டுவரை 2,97,000 கோடி ரூபாய் முதலீடுகளை, ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் ஈர்த்தார் நமது திராவிட நாயகன் அவர்கள். முதன்முறையாக அருமை அண்ணன் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் தலைமையிலேயே Davos-க்கு ஒரு குழுவை அனுப்பினார், முதலமைச்சர் அவர்கள். இப்படி பல்வேறு முயற்சிகளால் உலக முதலீட்டாளர்களின் பார்வையை தமிழ்நாட்டின் பக்கம் மீண்டும் திரும்ப வைத்தார். (GIM 2024)இதை தொடர்ந்து 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இன்று இந்தியாவே வியந்து பார்க்கும் GIM 2024 (உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024) தான். இதுவரை தமிழகம், ஏன் இந்தியாவுமே காணாத ஒரு பிரமிப்பூட்டும் மாநாடாக அமைந்தது. அதன் மூலம் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து வரலாற்றை படைத்தார் திராவிட நாயகன் அவர்கள்.

மாநாட்டை நடத்தும் போது இது கண்துடைப்பு வேலை, எந்த ஒரு முதலீடும் வராது என்று பலரும் ஆருடம் கூறினார்கள். ஆனால், இவர் எப்போதுமே முதலமைச்சராக முடியாது என்று கூறிய பல அரசியல் ஜோதிடர்களின் முகத்தில் கரியை பூசியவர் நமது முதலமைச்சர் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். ஆகையால் தான் ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ல் கையெழுத்திடப்பட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அடுத்த சில மாதங்களிலேயே படிப்படியாக அடிக்கல் நாட்டு விழாக்களின் மூலம் முதலீடுகளாக மாறியதைப் பார்த்து வாயடைத்து நின்றார்கள்..மற்றவர்களை போல் புரிந்துணர்வு ஒப்பந்தங்களோடு அவர் பணியை நிறுத்தவில்லை. உடனடியாக துறை அமைச்சர் என்ற முறையில் என்னையும் அரசின் தலைமைசெயலர் அவர்களையும் அனைத்து முக்கிய துறைகளின் செயலர்களையும் இணைத்து ஒரு குழுவையும் அமைத்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வேலை வாய்ப்புகளாக விரைந்து மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்திய அளவில் அதுவரை Conversion rate அதாவது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீடுகளாக மாறத் துவங்கும் சராசரி அளவு 25ல் இருந்து 30 சதவீதமாக மட்டுமே இருந்து வந்தது.எனவே GIM 2024 மூலம் நாம் 50 சதவீதத்தை எட்டினாலே அது மிகப்பெரிய பாராட்டுகுரியதாகும் என்று பல நிபுணர்களும், ஊடகத்தினரும் ஏன் எதிரணியினரும் தெரிவித்தார்கள்.பேரவைத்தலைவர் அவர்களே சென்ற ஆண்டு இதே அவையில் இது குறித்து பேசும் போது நாம் 50 சதவீதத்தை மட்டுமல்ல அதையும் தாண்டி 60 சதவீதத்தையும் எட்டி விட்டோம் என்ற செய்தியை தெரிவித்தேன்.ஒரு உச்சத்தை தொட்டபிறகு அதோடு அமைதியாக அமர்ந்துவிடுபவர் நமது முதலமைச்சர் அல்ல. எனவே தான் எனது உரையை முடித்துவிட்டு அவரை போய் சந்திக்கும்போது, 60 சதவீதம் தொட்டுவிட்டோம் என்று சொன்னதும் 70 சதவீதத்தை எப்போது தொடுவாய் என்று சட்டென்று கேட்டார். நிச்சயம் விரைவில் செய்து விடுகிறேன் என்று அன்றே முதலமைச்சர் அவர்களுக்கு உறுதியளித்தேன். இன்று இந்த அவையில் கலைஞரின் வளர்ப்பாக, தளபதியின் தம்பியாக, எங்களது துணை முதலமைச்சரின் தோழனாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டனாக பெருமையோடு ஒரு தகவலை இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

பேரவைத்தலைவர்அவர்களே, GIM 2024 மூலம் 70 சதவீதத்தை எப்போது எட்டுவாய் என்று என் தலைவர் கேட்டார். நாங்கள் திராவிட உடன்பிறப்புகள், தலைவர் போலவே இலக்கை தொட்டவுடன் அமைதியாக அமருவதில்லை எனவேதான் பேரவைத்தலைவர் அவர்களே GIM 2024 மூலம் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தலைவர் கேட்ட 70 சதவீதம் மட்டுமல்ல,அதையும்தாண்டி 72 சதவீதம் Conversion rate-ஐ எட்டி மிகப் பெரிய வரலாற்று சாதனையை திராவிடநாயகன் அவர்களின் இந்த அரசு செய்திருக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஏற்கனவே உருவாக்கியுள்ளார் முதலமைச்சர் அவர்கள்.உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் அவர்கள் பேசும்பொழுது தொழில்துறை அமைச்சரான எனக்கு அவர் ஒரு பரிட்சை வைத்ததாகவும், அந்த பரிட்சையிலே உலக முதலீட்டாளர் மாநாட்டை உலகமே வியக்கும் அளவிற்கு நடத்தியும், இந்தியாவே வியக்கும் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்தும் வெற்றி பெற்று, என் இதயத்தில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார் தம்பி ராஜா என்று முதல்வர் அவர்கள் பாராட்டினார்கள். அதற்கு நான் என்றும் நன்றி கடன்பட்டிருப்பதுடன் ,அவர் வைத்த தேர்வில் பாஸ் செய்வதோடு பணி முடிந்துவிடவில்லை. Distinction எடுக்க வேண்டும். அந்த வகையில் conversion rate 80 சதவீதத்தை விரைவில் தாண்டும் என்பதை இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது நீங்கள் மொத்த 4 ஆண்டு கணக்கு என்ன ஆச்சு என்று கேட்கலாம். அதற்கும் data வைத்திருக்கிறேன்.முதலமைச்சர் அவர்கள் 2022 முதல் 2024 வரை ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், துபாய், அமெரிக்கா என 5 நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க நேரடியாக சென்றிருக்கிறார். இதில் கையெழுத்திடப்பட்ட 36 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 23 ஒப்பந்தங்கள் முதலீடுகளாக மாறத் தொடங்கிவிட்டன. 2021ஆம் ஆண்டு முதல் இன்று 10,27,547 கோடி ரூபாய் முதலீடுகளுகளைப் பெற, 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இவற்றில், இப்பொழுது முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டு, ஒரு சில இடங்களில் உற்பத்தியே துவங்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 722.பேரவை தலைவர் அவர்களே, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஏதாவது ஒரிரு துறைகளில் மட்டும் சிறப்பான பணியை செய்து வருவார்கள். தெலங்கனா மற்றும் கர்நாடகா சேவை துறையிலும் குஜராத் பெட்ரோலியத் துறையிலும், மகராஷ்ட்ரா உற்பத்தித் துறையிலும் மட்டும் சிறப்பாக உள்ளன. ஆனால் தமிழ்நாடு மட்டும் தான் தொட்ட துறைகள் எல்லாம் SUPER KING ஆக திகழ்கிறது. நீண்டஆண்டுகளாக Automobile, textile, leather போன்ற துறைகளில் நாம் முன்னனியில் இருந்து வருகிறோம். ஆனால் அது மட்டும் இல்லாமல் தற்போது புதிய high tech தொழில்நுட்பம் சார்ந்த, உற்பத்தியிலும் தமிழ்நாடுதான் No.1 ஆக திகழ்கிறது. குறிப்பாக மின்னணு ஏற்றுமதியை பொறுத்தவரை 2021ஆம் ஆண்டு 1.66 பில்லியன் US டாலர் ஆக இருந்த நமது ஏற்றுமதியின் அளவு 2022 ல் 1.86 B USD ஆகவும், 2023ல் 5.37 B USD ஆகவும் 2024ல் 9.56 B USD-ஆகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்றியஅரசின் தரவுகளின் படி இந்திய அளவில் ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு பொருட்களின் மொத்த மதிப்பு 9 மடங்கு உயர்ந்து 14.65 பில்லியன் US டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு இந்தியாவின் ஏற்றுமதியில் 41.23 சதவீதம் திராவிட மாடல் அரசின் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆகிறது என்ற மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பேரவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

திராவிடமாடல் அரசு தொழில்துறையில் தொடர் வளர்ச்சியை பெறும்போதெல்லாம், அதிலிருந்து மக்களுக்கு நேரடியாக மிகப்பெரிய பயன்கள் கிடைப்பதை உறுதி செய்கிறார் முதலமைச்சர் அவர்கள். தோல் அல்லாத காலணிகளின் முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதன் முக்கிய நோக்கம் மகளிருக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்வது தான்.அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், உள்ள கிராமப்புற பெண்களுக்கு இதன் மூலம் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முதலைமைச்சர் முனைப்போடு இருக்கிறார், சரியான முதலீடுகளை சரியான இடங்களில் கொண்டு சேர்ப்பதன் மூலம் உறுதியான வளர்ச்சி கிட்டும். ஆகையால் தான் இந்திய அளவில் உற்பத்தி செய்யப்படும் தோல் அல்லாத காலணிகளின் ஏற்றுமதியில் 38 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.இதுபோல ஜவுளித்துறையில், வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள், தோல்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் எனப் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் Life sciences மற்றும் blue economyயில் நாம் பெரிதாக சாதிக்கவில்லை என்ற குறை இருந்துவந்தது . அதனை நிவர்த்தி செய்யும் வகையில் சென்னையில் ஒரு Bio Science park உருவாக்கப்படும் எனவும் மற்றும் TN marine transport manufacturing policy உருவாக்கப்படும் எனவும் அறிவித்தார் முதலமைச்சர் அவர்கள்.

Bio Similars துறையில் தமிழ்நாடு புதிய வரலாறும் படைக்கும். இதன் மூலம் பல புதிய உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும். Blue economyயைப் பொறுத்தவரை நமது மீனவப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கிட கடல் சார் உணவு மதிப்பு கூட்டுவதற்கான ஒரு புதிய அறிவிப்பை இன்று வெளியிட இருக்கிறோம். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்றால் நமது கிராமப்புறங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டிடவேண்டும். ஆகையினால் தான் இன்று தொழிற்சாலைகளே கண்டிராத ஜெயம்கொண்டம் போன்ற பகுதிகளுக்கு கூட திராவிட மாடல் அரசு முதன் முறையாக தொழில் வளர்ச்சியை கொண்டு போய் சேர்க்கிறது.
நீண்ட காலமாக தென் தமிழகத்திற்கு எந்த ஒரு தொழிற்வளர்ச்சியும் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆகையால் தான் வின்பாஸ்ட் போன்ற பெரும் நிறுவனத்தின் முதலீட்டை கொண்டு வரச் செய்து 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வந்த முதலீடுகளில் 30.32 சதவீதம் முதலீடுகளை தென் தமிழகத்திற்கு மட்டுமே கொண்டு வந்து குவித்திருக்கிறது இந்த அரசு.தற்போது தூத்துக்குடி திருநெல்வேலி பகுதிகள் வரலாறு காணாத தொழிற் வளர்ச்சியை (industrial boom என்றே கூறலாம்) பெற்று வருகிறது.தற்போது VINFAST நிறுவனத்தின் தொழிற்சாலை மின்னல் வேகத்தில் கட்டப்பட்டு வருகிறது. நிறுவனம் வரவே வராது, பொய் செய்தி என்றெல்லாம் புரளியை கிளப்பி விட்டார்கள் அவர்கள் எல்லாரும் இன்று வாய் அடைத்து, முதலமைச்சர் அவர்களின் பணிகளை மெய் மறந்து பார்க்கிறார்கள்.

இந்நேரத்தில் VINFAST குறித்த செய்தி ஒன்றை நான் சொல்ல வேண்டும். முதலீடுகள் வரும் போது அந்த பகுதி மக்களுக்கே வேலைவாய்ப்பை உறுதி செய்கிறார் முதலமைச்சர் அவர்கள். இந்நிறுவனம் அங்கே வரும்போது அவர்களுக்கு தேவையான உயர்தர வேலையாட்கள் அங்கே கிடைக்க மாட்டார்கள் என்றும் ஆகையால் தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் இருந்துதான் ஆட்களை எடுப்போம் என்று அடிக்கல் நாட்டு விழாவின் போது என்னிடமும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் திருமதி கனிமொழி அவர்களிடமும் அந்த நிறுவனத்தினர் கூறினார்கள். உடனே தமிழகத்தை நீங்கள் இந்தியாவில் மற்ற மாநிலங்கள் போல் பார்க்க கூடாது. உங்களுக்கு தேவையை விட அதிக திறன்மிக்க இளைஞர்களை உங்கள் தொழிற்சாலைக்கு அருகிலேயே உருவாக்கி காட்டுவோம் என்று அன்று உறுதியளித்தோம். இதன் மூலம் தூத்துக்குடி மற்றும் அருகில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளான விளாத்திகுளம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் வளர்ச்சிப்பெறும்சென்னை திரும்பியதும் எங்களது இளம் தலைவர் துணை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்த்து அவரது உத்தரவின் பேரில் நான் முதல்வன் திட்டத்தின் பயிற்சியாளர்கள் மூலம் 344 டிப்ளோமா மாணவர்களுக்கு 9 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் துணையோடு 21 நாட்கள் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில் 306 நபர்கள் நேர்காணலுக்கு சென்றனர். அவர்களில் இருந்து முதற்கட்டமாக 200 பேரை வேலைக்கு எடுத்துக்கொள்வதாக VINFAST உறுதியளித்துள்ளது. எனவே தான் சொல்கிறேன் முதலீடுகள் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பாக மாறும் வரை ஓய மாட்டார் நமது முதலமைச்சர் அவர்கள்.

இந்த பிரம்மாண்டமான வின்ஃபாஸ்ட் நிறுவனம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் தனது உற்பத்தியைத் தொடங்கிவிடும் என்ற மகிழ்ச்சியான செய்தியை பேரவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், தலைவர் கலைஞர் அவர்களின் நாங்குநேரி தொழிற்பூங்கா கனவை நனைவாக்கும் விதமாக முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் நாங்குநேரிக்கு புதிய சிப்காட்டை அறிவித்திருக்கிறார். இதன்மூலம் அருகில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளான நாகர்கோவில், விளவங்கோடு மற்றும் தென்காசி வளர்ச்சியடையும்.திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டங்களுக்கான அறிவிப்புகள் இருக்கின்றன. தென்காசிக்கும் கன்னியாகுமரிக்கும் என்ன இருக்கிறது என்று சிலர் கேட்கிறார்கள். கேட்பவர்களுக்கு அறிவிப்புகளில் நல்ல செய்தி இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தொழிற்சாலைகளே கண்டிராத மத்திய டெல்டா மண்டலத்திற்கும் 35,000 கோடி முதலீடுகளை கொண்டு வந்து குவித்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

வரலாற்றில் முதன்முறையாக தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அறிவித்த பெருமை எங்கள் டெல்டாகாரரையே சேரும். சென்னைக்கு அடுத்து திருச்சியையும் ஒரு மின்னணு உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார் முதலமைச்சர். எனவே தான் அமெரிக்காவில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் உலக பிரசித்திபெற்ற JABEL நிறுவனம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. சமீபத்தில் full chain என்ற தாய்வானிய நிறுவனத்தின் செமி கண்டக்டர் design centre திருச்சி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மணப்பாறையிலிருந்து இனி சுவையான முறுக்கு மட்டுமல்ல மின்னணு பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படும். இது மட்டுமின்றி அருகில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளும் வளர்ச்சியடையும்.இதை அடுத்து மதுரைக்கு எதுவும் இல்லையா? என்ற கேள்வி கேட்பவர்களுக்கு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் மதுரையில் மாபெரும் டைடல் பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றது.

மேலும், மேலூர் தொகுதியில் காலணி பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றது.பேரவை தலைவர் அவர்களே, மேற்கு மாவட்டங்களுக்கு பாரம்பரிய ஜவுளித் தொழில் மற்றும் மோட்டார்களைத் தாண்டி புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகள் வரவில்லை என்று கூறப்பட்ட நிலையில், இன்று கோவையில்அதிநவீனத்தொழில்நுட்பத் துறையில் சூலூர் மற்றும் பல்லடத்தில் இரண்டு செமிகண்டக்டர் பார்க்கை அறிவித்து கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் தொழில் புரட்சி நாயகன் அவர்கள். மேலும், அமெரிக்காவில் கையெழுத்திட்டு துவங்கப்பட்ட Yield இன்ஜினியரிங் System (YES) தனது தொழிலை தொடங்கி 27.03.2025 அன்று தனது தயாரிப்பில் இந்திய அளவிலான Semiconductor equipment ஐ தயார் செய்யும் முதல் நிறுவனமாகத் தடம் பதித்துள்ளது. ஆனால் காலையில் எதிர்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கோவைக்கு எந்த திட்டமும் வரவில்லை என்கிறார். சென்ற வாரம் வந்த தரவுகளின்படி திருப்பூர் தொழில் நிறுவனங்களின் தொடர் முயற்சியினால் கடந்த ஆண்டில் மட்டும் திருப்பூரில் ஜவுளி ஏற்றுமதி 40,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இச்சமயத்தில் இத்துறையின் சார்பாக எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆடைகள் தயாரிப்பில் முக்கிய பிரச்சனை வேலை ஆட்கள் கிடைப்பது தான். இதையும் சரி செய்யும் விதமாக தொழில் கூட்டமைப்புடன் ஆலோசனைகளை நடத்தி இன்று அவர்களுக்காகவும் ஓர் அற்புதமான அறிவிப்பை இத்துறை சிப்காட் மூலம் வெளியிட உள்ளது. பேரவைதலைவர் அவர்களே முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் 1973 ஆம் ஆண்டு ராணிப்பேட்டையில் துவங்கப்பட்ட முதல் சிப்காட்டிலிருந்து 2021 வரை மொத்தமாக தமிழ்நாட்டில் 24 சிப்காட்டுகள் உருவாக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தொழில்புரட்சி நாயகன் நமது முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் 30 சிப்காட் பூங்காக்களை அறிவித்து சாதனை படைத்திருக்கிறார். தொழிற் பூங்காக்களை உருவாக்கும் போது விவசாயிகளின் நஞ்சை நிலங்கள் பாதிக்காதவண்ணம் நில எடுப்பு இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் நமது முதலமைச்சர். ஆகவே, ஒரு இன்டரஸ்டிங் டேட்டாவை அவை முன் வைக்க விரும்புகிறேன்.

இதுவரை சிப்காட் வசமுள்ள 48,926 ஏக்கர் நிலப்பரப்பில், 468 ஏக்கர் அதாவது 0.96% மட்டுமே நஞ்சை நிலமாகும். அதுவும் ஒரு தரிசு நிலத்தில் இருந்து இன்னொரு தரிசு நிலத்தை இணைக்கும் வேறு வழியில்லாமல் எடுக்கப்படும் நஞ்சை நிலங்கள் ஆகும்.தொழிற்சாலைகள் உருவாகும் போது தொழிலாளர்களின் நலனையை பிரதானமாக கொள்கிறார் முதலமைச்சர் அவர்கள். சில நேரங்களில் தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் உருவாகும் சிக்கல்களின் போது தொழிலாளர் பக்கம் நின்று, சுமூகமான பேச்சுவார்த்தைகளை நடத்தி பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார். சமீபத்தில் நடந்த சாம்சங் விவகாரத்தில்கூட, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க சிலர் கருதி, தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை வேறு மாநிலத்திற்கு அனுப்ப முயன்றார்கள். முதலமைச்சர் அவர்கள் சரியாக இந்தப் பிரச்சினையைக் கையாண்டதால்தான் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு சென்றுள்ளார்கள்.

அதே சமயம், சாம்சங் நிறுவனமும் நமது தமிழ்நாட்டின் தொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்து மேலும் 100 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக, அதாவது ஒட்டுமொத்தமாக 3500 என்ற எண்ணிக்கையில் தொழிலாளர்களின் அளவை உயர்த்திட, புதியதாக 1000 கோடி ரூபாயை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்களின் நலனுக்காக ஓசூரில் TATA நிறுவனத்துடன் சேர்ந்து 6500 படுக்கைகள் கொண்ட விடியல் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும், இதை 25000 படுக்கைகளாக அதிகரிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் Foxconn நிறுவனத்தில் 18000 பெண்கள் தங்குவதற்கான விடுதியையும் உருவாக்க உதவியிருக்கிறது நமது அரசு.இந்நேரத்தில் Service Sector-ல் பணிபுரியும் பெண்களுக்காக திராவிட மாடல் அரசின் தோழி விடுதிகள் உருவாக்கியதற்காக முதலைமச்சர் அவர்களுக்கும் துணை முதலமைச்சர் அவர்களுக்கும் துறையின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத இந்த அற்புதமான திட்டத்தை இன்று வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் Newyork times மற்றும் Singapore ல் இருந்து Straits times போன்ற ஊடகங்களும் வியந்து பார்த்து திராவிட மாடல் அரசை பாராட்டுகின்றனர்.இப்படி தோழி விடுதிகளில் பணிபுரியும் பலர் தொழில்நுட்ப துறையில் பிரம்மாண்ட பாய்ச்சலில் இருக்கும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து, குடும்பங்களை பிரிந்து தங்கி உழைக்கிறார்கள். இதைக் கண்ட முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிலே முதன்முறையாக, IT துறையில் பணியாற்றும் இளம் தலைமுறையினர் தங்கள் ஊரிலேயே பணிபுரிய ஏதவாக, தமிழ்நாட்டின் இரண்டாம்-மூன்றாம் கட்ட நகரங்களில் தரமான ஐ.டி. அலுவலகக் கட்டடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என முடிவெடுத்தார். அந்த எண்ணத்தில் உதயமானது தான் TIDEL NEO திட்டம். தமிழ்நாட்டில் 10 TIDEL NEO-க்கள் அறிவிக்கப்பட்டு ஏற்கனவே 4 கட்டி முடிக்கப்பட்டு, அதில் ஐ.டி. அலுவலகங்கள் நிரம்பியுள்ள நிலையில், மேலும் 3 இடங்களில் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்திருக்கின்றன.

மேலும் தென் மாவட்டங்களில் மிக அத்தியாவசியமாக தேவைப்படும் IT வேலைகளை ஊக்குவிக்க, தூத்துக்குடியில் கட்டியிருப்பது போல விரைவில் திருநெல்வேலியிலும் கன்னியாகுமரியிலும் ஐ.டி.பூங்காக்களை திராவிட மாடல் அரசு அமைத்து தரும் என்ற மகிழ்ச்சியான செய்தியை அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல ஈரோடு மாவட்டத்திலும், டெல்டா மாவட்டங்கள் ஒன்றிலும் புதிய டைடல் நியோ பூங்காக்கள் அமைக்கப்படும். பேரவை தலைவர் அவர்களே, மகத்தான தொழில் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் அத்தியாவசியமாக இருப்பதால்தான் கோவை விமான நிலைய விரிவாக்க பணியையும், சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையத்தையும், ஓசூர் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இடங்களிலும் புதிய விமான நிலையங்களையும் அறிவித்து இருக்கிறார். அதற்கான முதற்கட்ட வேலையாக நிலத்தை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றது. முதலமைச்சர் அவர்கள் இவற்றிற்கான அனைத்து பணிகளை மிகச் சிறப்பான வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்ற செய்தியை அவைக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். நேரத்தின் அருமை கருதி TANSALT, TANCEM, TIIC, TNPL உள்ளிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளை சில வரியில் விவரிக்க உள்ளேன்.

TIIC பொறுத்தவரை 2020-21ல் வழங்கப்பட்ட கடன் அளவு ஏறத்தாழ 850 கோடியாக மட்டுமே இருந்தது. இன்று அது ஏறத்தாழ இரட்டிப்பாகி 1630 கோடியாக இருக்கிறது. அதேபோல வட்டி வருமானம் 144 கோடியிலிருந்து இரண்டு மடங்காக உயர்ந்து ஏறத்தாழ 300 கோடியாக இருக்கிறது. TNPL பொறுத்தவரை பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்த 588 நபர்களுக்கு ஒரே நாளில் பணி நிரந்தரம் செய்து தந்தார் முதலமைச்சர் அவர்கள். அதே சமயம் 7 நபர்களுக்கு கருணை அடிப்படையிலும் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. TANCEM பொறுத்தவரை கடந்த வருடம் சிமெண்ட் விலைகள் மிகக் குறைந்து இருந்தபோதும் சரி, தற்போது உயர்ந்திருக்கும் நிலைமையிலும் சரி, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான சிமெண்ட்டை வழங்கி சிறப்பான பணியை செய்து வருகிறது. தற்போது மற்ற நிறுவனங்கள் 340 ரூபாய்க்கு ஒரு மூட்டையை விற்கும் நிலையில், வலிமை சிமெண்ட்டை 285 ரூபாய்க்கே கிடைக்கச் செய்கிறது டான்செம்.

TANSALT பொறுத்தவரை 2021-22 ஆம் ஆண்டு IG உப்பு உற்பத்தி 3500 டன்னாக இருந்தது இன்று நான்கே ஆண்டுகளில் 24,369 டன்னாக உயர்ந்திருக்கிறது. உப்பளத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணத் தொகை 2021-22ஆம் ஆண்டில் ஏறத்தாழ 6000 பேருக்கு கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது 11,329 நபர்களுக்கு தலா 5000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் தொழில்துறை வளர்ச்சிக்கு சான்றாக எண்களை மட்டுமே குறிப்பிட்டு இதுவரை பேசியிருக்கிறேன். இது குறித்த நான்காண்டு சாதனைப் புத்தகத்தையும் அவை முன் வைத்திருக்கிறோம். வளர்ச்சியையும் சாதனைகளையும் எடுத்துக் காட்டும் எண்களுக்குப் பின்னால் பல இலட்சம் முகங்கள் உண்டு. பலரும் அறியாத உண்மைக் கதைகளும் உண்டு. அந்தக் கதைகளைத்தான் முகம் என்ற புத்தகத்தின் மூலம் தொழில்துறை கொண்டாடியிருக்கிறது.இதில் 55 கதைகள்தான் இருக்கின்றன. ஆனால், பல கோடி தொழிலாளர்களின் உழைப்பில் சிந்திய வியர்வைதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ற ஆலமரத்தின் வேர்களுக்கு உயிர்நீராகப் பாய்ந்திருக்கிறது. அந்த முகங்களுக்கு எங்கள் துறையின் சார்பில் நன்றியைத் தெரிவித்து, அந்த முகங்களின் பிரதிபலிப்பாக இந்த அவையில் வீற்றிருக்கும் முதல்வர் அவர்களின் கட்டளைப்படி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வளர்ச்சியை இந்தத் துறை உறுதி செய்யும் என்று கூறி, இந்த மானியக் கோரிக்கை பதிலுரையை தயார் செய்து அனுதினமும் எனக்குத் துணை நின்று ஆலோசனைகளை வழங்கிய நமது தலைமைச் செயலாளர் அவர்கள், நிதித்துறை செயலாளர் அவர்கள், எனது துறையின் செயலாளர் திரு.அருண் ராய், திரு.சந்தீப் சக்சேனா, திரு.சாய்குமார், திரு.தாரஜ் அகமது, திரு.மகேஸ்வரன் திருமிகு. பல்லவி பல்தேவ், திரு.சந்தீப் நந்தூரி, திரு. அஜய் யாதவ், திரு.செந்தில்ராஜ், திருமிகு.சிநேகா மற்றும் திருமிகு. அலமேலு மங்கை, துறையின் உயரதிகாரிகள் ஆகியோருக்கு என் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.டிஆர்.பி.ராஜா அவர்கள் பதிலுரையில் தெரிவித்தார்.

The post தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்.பி.ராஜா ஆற்றிய பதிலுரை!! appeared first on Dinakaran.

Tags : Minister of Industry, Investment Promotion and Commerce ,TR.P.Raja ,Tamil Nadu Legislative Assembly ,Chennai ,Minister of Industry ,Investment Promotion and Commerce ,Assembly ,Anna ,
× RELATED புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி...