மதுரை, ஏப். 25: வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில், மதுரை பந்தல்குடி கால்வாய் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மறு சீரமைப்பு ெசய்யப்பட உள்ளது. மதுரை, கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டுமானப்பணிக்காக பந்தல்குடி கால்வாய் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சமீபத்தில் அகற்றப்பட்டது. இதனால் இக்கால்வாயில் வரும் கழிவுநீர், ஆழ்வார்புரம் அருகே வைகை ஆற்றில் நேரடியாக கலப்பதாக புகார் எழுந்தது. இதனை தடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்தனர். முன்னதாக கழிவுநீர் கலப்பதை தடுக்க பந்தல் குடி கால்வாய் வைகை ஆற்றுடன் இணையும் கோரிப்பாளையம் பகுதியில் 2 எம்எல்டி கழிவு நீர சுத்திகரிப்பு நிலையம் இருந்தது.
இதில் நீரேற்று மோட்டார்களுடன் தலா ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 மெகா சுத்திகரிப்பு தொட்டிகளும் இருந்தன. தினந்தோறும் சுமார் 20 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரித்த இந்நிலையம், 2020ல் ரூ.3.15 கோடியில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கோரிப்பாளையம் மேம்பால பணிகள் காரணமாக இந்த சுத்திகரிப்பு நிலையம் அகற்றப்பட்டது. இதையடுத்து வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக எழுந்த புகார் தொடர்பாக, இப்பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து போர்கால அடிப்படையில் ஒரு கோடி ரூபாய் செலவில் பந்தல்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், இப்பகுதியில் மீண்டும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மசிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் கூறும்போது, ‘‘கோரிப்பாளையம் மேம்பாலம் பணிகளுக்காக வேறு வழியின்றி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அகற்றப்பட்டது. எனினும், மீண்டும் அதே இடத்தில் சீரமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். இந்த நடவடிக்கையால் இனி வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் காப்பாற்றலாம்’’ என்றார்.
The post பந்தல்குடி கால்வாய் பகுதியில் ரூ.1 கோடியில் சீரமைக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: வைகையை பாதுகாக்க நடவடிக்கை appeared first on Dinakaran.
