சிவகாசி, ஏப். 24 :சிவகாசி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஜெயசீலன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, சிகிச்சை பெற வந்த கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அணுகுமுறை, அடிப்படை வசதிகள், மருத்துவ சேவையின் தரம், மக்களைத் தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பக் காலத்தில் வழங்கப்படும் பேறுகால நிதி உதவித்தொகை, ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் குருதி மையத்திற்கு தேசிய சுகாதார திட்டம் மூலம் ரூ.13 லட்சம் மதிப்பில் குருதி பகுப்பாய்வு செய்யும் உபகரணம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், ரூ.28 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ள குருதி பகுப்பாய்வு செய்ய பயன்படும் உபகரணங்களையும் கலெக்டர் ஜெயசீலன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அய்யனார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
The post சிவகாசி ஜிஹெச்சில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.
