சிவகாசி, ஏப். 24: சிவகாசி அருகே, ரயிலில் பாய்ந்து பெண் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே, ஆனையூர் கிராமத்தில் உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் தவசியம்மாள் (45). பட்டாசு ஆலை தொழிலாளி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக வேலைக்கு செல்லவில்லை. உடல், மனரீதியாக பாதிக்கப்பட்ட தவசியம்மாள் நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
காலை 5.30 மணி அளவில் லட்சுமியாபுரம் ரயில்வே தடத்தில் சென்னையிலிருந்து தென்காசி சென்றுகொண்டிருந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். வில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் தவசியம்மாளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். ஓடும் ரயில் முன் பாய்ந்து பெண் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post சிவகாசி அருகே ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை appeared first on Dinakaran.
