தூத்துக்குடி, ஏப். 24: தூத்துக்குடியில் போலீசார் தாக்கியதால் மீனவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவத்தில் 2ம் நாளாக நேற்று உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்தவர் ஆனந்த சைரஸ் (47). மீனவரான இவர் குடும்பத்தினருடன் ராஜகோபால்நகரில் வசித்து வந்தார். இவருக்கும், இவரது வீட்டு அருகே வசித்து வரும் கருப்பசாமிக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 19ம்தேதி இரவு ஆனந்த சைரஸ் வீட்டு முன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருப்பசாமி, சிப்காட் போலீசிற்கு தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சிப்காட் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் 3 பேர் ஆனந்த சைரஸ் வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கிருந்த ஆனந்த சைரசிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, போலீசார் அப்பகுதி மக்கள் முன்பு வைத்து ஆனந்த சைரசை தாக்கியதாகவும், அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ஆனந்த சைரஸ் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த போலீசார் தீயை அணைத்துள்ளனர்.
மேலும் இதில் உடல் கருகிய ஆனந்த சைரசை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 2ம் நாளாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த ஆனந்த சைரஸ் இறப்பிற்கு காரணமான ஒரு தனிப்பிரிவு போலீஸ்காரர் உள்ளிட்ட 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யவேண்டும், மேலும் ஆனந்த சைரஸ் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
The post 2ம் நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம் appeared first on Dinakaran.
