×

பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கலாம்

தஞ்சாவூர்,ஏப்.23: தஞ்சாவூர் மாவட்டத்தில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களை சேர்க்கலாம் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர், கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பள்ளியில் சிறப்பாசிரியர்களால் பார்வையற்ற மற்றும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கு பிரத்தியேக முறையான பிரெய்லி வழியாக கல்வி கற்பிக்கப்படுகிறது. மேலும், இப்பள்ளியில் மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள் மற்றும் மாநில அரசினால் வழங்கப்படும் கல்வி உபகரணங்கள், சீருடை, காலணி, பிரெய்லி புத்தகங்கள் மற்றும் கணித உபகரணங்கள் போன்றவை இலவசமாகப் பெற்றுத்தரப்படுகிறது.

இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நடைப்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், நடனம், கராத்தே, யோகா, சிலம்பம், இசை போன்ற இதரக் கலைகள் கற்பிக்கப்படுகின்றன. இப்பள்ளி கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத மாணவர் தேர்ச்சியினை தொடர்ந்து அளித்து வருகிறது. மாணவர்களுக்கு மாதந்தோறும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பள்ளியின் விடுதியில் மாணவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு சுகாதாரமான இருப்பிட வசதிகள், ஆரோக்கியமான உணவு, மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர் சேர்க்கைக்கு அணுக வேண்டிய முகவரி: பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம், தஞ்சாவூர், அலுவலக தொலைபேசிஎண்: 04362 272222 மற்றும் தலைமையாசிரியரின் கைபேசி எண்: 9486142225 ஆகவே, தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சுற்றியுள்ள மாவட்டத்தில் உள்ள பார்வையற்ற மற்றும் பார்வைத்திறன் குறையுடைய மாணவ. மாணவிகளை தஞ்சாவூர் பார்வைத்திறன் குறையுடைய அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்குமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கலாம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Collector ,Priyanka Pankajam ,Government Higher Secondary School for ,Visually Impaired ,Thanjavur Government Higher Secondary School for the Visually Impaired ,Director of Welfare of the Disabled ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை