அரியலூர், ஏப்.23: அரியலூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் விளையாட்டு விடுதியில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, அரியலூர் கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் கடந்த 21ம் தேதி முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7-ஆம், 8-ஆம், 9-ஆம் மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கான கடைசி நாள் மே 5 அன்று மாலை 5 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும், தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசியினை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரத்தினை பெற்று கொள்ளலாம். விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் மே 7ம் தேதி அன்று காலை 7 மணியளவில் ஆண்களுக்கும், 8ம் தேதி காலை 7 மணியளவில் பெண்களுக்கும் கீழ்காணும் விபரப்படி நடைபெற இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான தகவல்கள் குறுஞ்செய்தி, வாட்ஸ் ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும். விளையாட்டு விடுதி – மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதித் தேர்வுகள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து கபாடி, கையுந்துபந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் மாணவர்களுக்கு மே 7 அன்று காலை 7 மணி அளவிலும், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து கபாடி, கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகளில் மாணவிகளுக்கு 8 அன்று காலை 7 மணி அளவிலும் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.
மாவட்ட அளவிலான தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே, அரியலூர் மாவட்டத்திலுள்ள மேற்கண்ட விளையாட்டுக்களில் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் உரிய தேதிகளில் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன்பெற வேண்டுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
The post அரியலூர் மாவட்ட மாணவ, மாணவியர் விளையாட்டு விடுதியில் சேர இணையத்தில் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.
