×

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடம் உத்தரவை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு: திருத்தப்பட்ட ஆணை வெளியிடப்படும்; கல்வியமைச்சர் அறிவிப்பு

மும்பை: பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி கட்டாயப் பாடம் ஆக்கப்பட்ட உத்தரவை மகாராஷ்டிரா அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த அறிவிப்பை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தாதா புசே நேற்று அறிவித்தார். அரசாணையில் ‘கட்டாயம்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு புதிய ஆணை வெளியிடப்படும் என அவர் கூறினார். மகாராஷ்டிராவில் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தியை கட்டாயமாக்க கடந்த வாரம் அரசு உத்தரவு பிறப்பித்தது. அரசின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா, உத்தவ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அரசின் மொழி ஆலோசனைக் குழு முதல்வர் தேவேந்திர பட்நவிசுக்கு எழுதிய கடிதத்தில், இந்தி கட்டாயப்பாடம் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயம் கிடையாது; மராத்திதான் கட்டாயம் என முதல்வர் பட்நவிஸ் திடீர் பல்டி அடித்தார். இதைத் தொடர்ந்து, இந்தி கட்டாயம் என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக மகாராஷ்டிரா மாநில கல்வியமைச்சர் தாதா புசே நேற்று அறிவித்தார்.

இது குறித்து அவர் நேற்று கூறியதாவது: மராத்தி மொழியைக் கற்பது மாநிலத்தில் கட்டாயமாக்கப்படும். மராத்தி மொழியை கற்பிப்பது திறம்பட செயல்படுத்தப்படுவதை கல்வித் துறை கண்காணிக்கும். இந்தியை திணிக்க மாநில அரசுக்கு ஒன்றிய அரசு அழுத்தமும் கொடுக்கவில்லை ஏற்கெனவே பிறப்பித்த அரசு உத்தரவில் கட்டாயம் என்ற வார்த்தையை நிறுத்தி வைக்கிறோம். திருத்தப்பட்ட அரசாணை பின்னர் வெளியிடப்படும். மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பது அவரவர் விருப்பப்படியான தேர்வாகவே இருக்கும். இவ்வாறு தாதா புசே கூறினார்.

The post 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடம் உத்தரவை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு: திருத்தப்பட்ட ஆணை வெளியிடப்படும்; கல்வியமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Maharashtra government ,Mumbai ,School Education Minister ,Dada Bhushe… ,Education ,
× RELATED டெல்லி உலக புத்தக கண்காட்சியில் முதல்முறையாக தமிழ்நாடு அரங்கு!!