- வேலூர்
- வரி தண்டலர்
- வேலூர் ஆட்சியர்
- கலெக்டர்
- சுப்புலட்சுமி
- டி.ஆர்.ஓ. மாலதி
- வேலூர் நஞ்சுகொண்டபுரம்…
- தின மலர்
*தாசில்தாரின் டிரைவர் மீது புகார்
வேலூர் : வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ மாலதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
கூட்டத்தில், வேலூர் நஞ்சுகொண்டாபுரத்தை சேர்ந்த கோதண்டன், தனது மனைவி மற்றும் கர்ப்பிணி மகளுடன் அளித்த மனுவில், எங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசிக்கிறோம். அதற்கு 3 ஆண்டுகளாக ஊராட்சி சார்பில் வீட்டு வரி வசூலித்தனர்.
மேலும் அதற்கான ரசீது கொடுத்தனர். ஆனால் தற்போது ரசீது தரவில்லை. இதை கேட்டால் வீட்டின் மீது வழக்கு இருப்பதால் ரசீது தர முடியாது எனக்கூறுகின்றனர்.
வீட்டிற்கு மின்வசதியும் இல்லை. எனது மகள் கர்ப்பிணியாக இருப்பதால் மின்சாரம் இன்றி சிரமத்திற்குள்ளாகி வருகிறார். எனவே வீட்டு வரி ரசீது வழங்குவதுடன் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
வேலூர் கலாஸ்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன்(39), அளித்த மனுவில், ‘நான் வேலூர் கூட்டுறவு பெட்ரோல் பங்கில் தற்காலிக ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறேன். இந்த பங்கில் ரெகுலராக டீசல் போட தாசில்தாரின் டிரைவர் ஒருவர் வருவார்.
அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக என்னிடம் ரூ.3 லட்சம் பணம் பெற்றுக்கொண்டார். மேலும் எனது நண்பர்கள் 4 பேரிடம் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.15 லட்சத்தை கடந்த 2022ம் ஆண்டு கொடுத்தோம். 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் வேலையும் கிடைக்கவில்லை, பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
மேல்காவனூரில் கோயிலை இடித்து, தனிநபர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். வேலூர் ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு அளித்தனர். கூட்டத்தில் முதியோர் உதவிதொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 620 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அங்கன்வாடி இடம் ஆக்கிரமிப்பு
கே.வி.குப்பம் அடுத்த பள்ளத்தூர் கிராம மக்கள் குழந்தைகளுடன் மனு அளிக்க வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறுகையில், ‘பள்ளத்தூர் கொட்டாய்மேடு பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
அந்த இடத்தில் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. பாதுகாப்பு குறைவாக உள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கன்வாடி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் தனிநபர் ஒருவர் வீடு கட்டி பட்டா பெற முயற்சி செய்கிறார். இதை தடுத்து அப்பகுதியில் அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும்’ என்றனர்.
பட்டாவில் சம்பந்தமில்லாத நபர்களின் பெயரால் தர்ணா
கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த முருகேசன், அவரது தம்பியின் மாற்றுத்திறனாளி மகள் ஆகியோருடன் வந்து மனு கொடுக்க வந்தார். பின்னர் திடீரென கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்ட அரங்கின் எதிரே 4 பேரும் தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் அழைத்து சென்றனர்.
அங்கு அவர் அளித்த மனுவில், ‘எனது மனைவி மற்றும் எனது தம்பி மனைவியின் பெயரில் இருந்த நிலத்தில் 4 சென்ட் இடத்தை தனிநபருக்கு 2021ம் ஆண்டு விற்பனை செய்து விட்டோம். ஆனால் விற்பனை செய்யாத மற்ற இடத்தின் பட்டாவில் வேறு சம்பந்தமில்லாத 10 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த பெயர்களை நீக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்ைல. எனவே பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
The post வேலூரில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி appeared first on Dinakaran.
