சென்னை: பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்தது ஏன்? என்பதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை, தலைமை செயலக வளாகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நீட் குறித்து 2010 டிசம்பர் 21ம் தேதி நோட்டிபிகேஷன் வெளியிட்டார்கள், அப்பொழுது மத்தியில் காங்கிரஸ் தலைமையில் திமுக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது. ஏதோ அதிமுக இருக்கும்போதுதான் வந்தது என்று தவறான செய்தியை தொடர்ந்து முதலமைச்சரும், அமைச்சர்களும் பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள். இது நாட்டு மக்களுக்கு தெரியும். இது கொண்டு வந்தது காங்கிரசும், திமுகவும்தான், ஏன் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்களுக்கு தெரியாதா? கொண்டு வந்தது இவர்கள். அதை தடுப்பதற்கு நாங்கள் கடுமையான முயற்சி எடுத்தோம். ஆனால் முடியவில்லை. நீதிமன்றம் சென்று விட்டது. அதனால் இந்த நீட் தேர்வு அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
2021 சட்டமன்ற பொதுதேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். இன்றைக்கு முதல்வர் என்ன சொல்கின்றார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் ரத்து செய்து இருப்போம் என்கிறார். எப்பொழுது பார்த்தாலும் திமுககாரர்களும், திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பவர்களும், அதிமுக – பாஜ கூட்டணி என்று அனைவரும் அறிக்கை விடுகின்றனர், கம்யூனிஸ்ட் கட்சியினரும் அறிக்கை விடுகின்றனர். இன்றைக்கு முதலமைச்சர் அப்படியே துடிதுடிக்க பேசுகின்றார். நாங்கள் கூட்டணி வைத்தால் நீங்கள் ஏன் பதறுகிறீர்கள்?
அதிமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், அது எங்களுடைய விருப்பம், எங்களுடைய கட்சி. அதிமுக நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுதேர்தலில் வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு கட்சியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகதான் கூட்டணி வைக்கின்றார்கள். நீங்கள் எப்போது பார்த்தாலும் பலம் வாய்ந்த கூட்டணி என்று சொல்கின்றீர்களே, அதுபோல் நாங்களும் பலம் வாய்ந்த கூட்டணியை 2026 சட்டமன்ற தேர்தலில் அமைப்போம், நிச்சயமாக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post பாஜவுடன் கூட்டணி ஏன்? எடப்பாடி விளக்கம் appeared first on Dinakaran.
