
என்னால் இயக்கத்திற்கோ, தலைவருக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்றுதான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்
சென்னை: மதிமுக கட்சியை சிதைக்க ஒருவர் உள்ளார் என குற்றம்சாட்டிய முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி அந்த பதவியில் இருந்து விலகி உள்ளார். கடந்த சில நாட்களாக துரை வைகோவுக்கும், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே மறைமுக மோதல் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், ஒரு உறுப்பினர் நேரடியாக துரை வைகோ மீது குற்றம்சாட்டி பேசினார். இதற்கு மல்லை சத்யா தான் காரணம் என்று கருதிய துரை வைகோ, கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதை தொடர்ந்து துரை வைகோவின் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு வைகோ கண்டனம் தெரிவித்ததோடு, இனிமேல் இதுபோன்று யாரும் செயல்படக் கூடாது என்று எச்சரித்திருந்தார்.
கட்சியின் பொதுச் செயலாளரும், தனது தந்தையுமான வைகோ, தனக்கு ஆதரவாக இல்லாமல், மல்லை சத்யாவுக்கு ஆதரவாக இருப்பதாக கருதி, கட்சியின் பொறுப்புகளில் இருந்து துரை வைகோ விலகியுள்ளார். இதுதொடர்பாக, துரை வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என்னை கட்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து அழைத்த வண்ணம் இருந்தனர். கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன்வந்த தலைவர் நிர்வாக குழு கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டார். நிர்வாக குழு கூட்டத்தில் கலந்துகொண்ட 106 பேரில் 104 பேர் கட்சியில் நான் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வாக்குகளை அளித்தனர். இப்படியாகத்தான் கட்சியின் தலைமைக் கழகச் செயலாளராக, அதன் பின்னர் பொதுக்குழுவில் முதன்மை செயலாளராக கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
நாடாளுமன்றத் தேர்தல் நிதி திரட்டும் பணிகளில் கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு கணிசமான நிதியையும் திரட்டித் தந்து தலைவரை மகிழ்வித்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு புதிய சின்னமாகத் தீப்பட்டி சின்னத்தை தேர்வு செய்து 15 நாட்களில் மக்களிடையே எடுத்துச் சென்று திருச்சி தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவோடு வியக்கத்தக்க வெற்றியை நாம் பெற்றோம். தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர். நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர்’ என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை.
எனவே கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். நாளை (இன்று) நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால் அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்துகொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, தலைவருக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்றுதான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். அதே நேரத்தில் மதிமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 7 ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கட்சியினர் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post இன்றைய நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பு; மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகல்: கட்சியை சிதைக்க ஒருவர் உள்ளார் என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
