பண்ருட்டி : பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த செம்பு நாயணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டபோது ஆற்றின் கரையில் 2 செம்பு நாணயங்கள் இருப்பதை கண்டெடுத்தார். பின்னர் அந்த நாணயத்தை ஆய்வு செய்ததில் அவை விஜயநகர காலத்திய நாணயம் என்பதும், இரண்டாம் தேவராய மன்னரின் படைத் தளபதியும், கீழ் தெக்கலி ராஜ்யத்தின் ஆளுநராக இருந்த “லக்ண தண்ட நாயக்கர்” என்பவரின் நாணயம் என்பது தெரிந்தது.
இரண்டாம் தேவராயரின் அனுமதியுடன் தனது சொந்த பெயரில் இவர் நாணயங்களை அச்சிட்டுள்ளார். நாணயத்தின் முன் பக்கத்தில் யானை ஓடுவதுபோல் உள்ளது. யானையின் மேல் பகுதியில் கன்னட எழுத்தில் “ல” என்று உள்ளது. நாணயத்தின் பின்பக்கத்தில் 3 வரிகள் கன்னட எழுத்தில்” கன தனய காரு “என்று உள்ளது என்று புதுச்சேரியில் உள்ள நாணய ஆய்வாளர் பாலாஜி ரவிராஜன் படித்து கூறினார்.
தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மேற்பரப்பு களஆய்வில் தொடர்ந்து பல தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தி வருவதாகவும் ஆய்வாளர் இம்மானுவேல் கூறினார்.
The post பண்ருட்டி அருகே 15ம் நூற்றாண்டை சேர்ந்த செம்பு நாணயம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.
