வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே பைக் மீது லாரி மோதியதில் அதில் சிக்கி 12 கிமீ தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வடுகபட்டியை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் சூரியபிரகாஷ் (30). வெளிமாநில லாரிகளுக்கு வழிகாட்டும் லாரி புரோக்கிங் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இவர், நேற்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து வடுகபட்டிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையில் ஆண்டிப்பட்டி பகுதியில், ஹரியானா மாநிலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி, டூவீலர் மீது பின்புறமாக மோதியது. இதில் சூரியபிரகாஷ் லாரியின் பக்கவாட்டில் இருசக்கர வாகனத்துடன் சிக்கிக் கொண்டார்.
இதனை அறியாத டிரைவர், சூரியபிரகாஷின் உடலுடன் சுமார் 12 கிமீ தூரம் வரை சமயநல்லூர் அருகிலுள்ள கட்டப்புளிநகர் வரை லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பின்புறமாக வந்த பிற லாரி ஓட்டுநர்கள் அதனை அறிந்து லாரியை மறித்து தகவல்களை கூறியபோது, ஹரியானா டிரைவர், லாரியை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். பரிசோதனையில் சூரியபிரகாஷ் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சமயநல்லூர் போலீசார், சூரியபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பைக் மீது மோதி விபத்து லாரியில் சிக்கி 12 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் பலி appeared first on Dinakaran.
