×

பள்ளி கட்டுமான பணிக்கு சேமிப்பு தொகையை நன்கொடையாக வழங்கிய இரட்டையர்களுக்கு பாராட்டு

ராஜபாளையம், ஏப்.18: ராஜபாளையம் அருகே அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் கட்டிட பணிக்கு இரட்டையர்கள் தங்கள் உண்டியல் சேமிப்பு பணத்தை நன்கொடையாக வழங்கினர். ராஜபாளையம் அருகே சேத்தூரை சேர்ந்தவர் மாடசாமி. இவரது இரட்டை குழந்தைகளான மதிவிழி, மதிமுகிலன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தனர். இருவரும் நேற்று தொடக்க வகுப்பு முடிந்து பள்ளியை விட்டு வெளியேறினர். பள்ளியில் ஆஸ்பெஸ்டாஸ் ஓடு வேயப்பட்ட கட்டிடம் சிமிண்ட் கான்கிரீட் கட்டிடமாக கட்டப்பட உள்ளது.

இதையடுத்து தங்கள் பயின்ற பள்ளியில் நடைபெற உள்ள கட்டுமான பணிகளுக்காக, தங்களால் முடிந்த சிறிய தொகையாக, சிறு வயது முதல் சேர்த்து வைத்த ரூ.5 ஆயிரத்தை தலைமை ஆசிரியர் ரவியிடம் இரட்டையர் நன்கொடையாக வழங்கினர். மேலும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசாக பேனாக்களையும், தலைகீழாக பார்த்தாலும் தமிழ் என தெரியும் பதாகையையும், உடன் பயிலும் மாணவர்களுக்கு பென்சில் பெட்டிகளையும் வழங்கினர். இரட்டையர்களின் செயலுக்கு உடன்படித்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post பள்ளி கட்டுமான பணிக்கு சேமிப்பு தொகையை நன்கொடையாக வழங்கிய இரட்டையர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Madasamy ,Settur ,Mathivizhi ,Mathimukhilan ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை