திருவாடானை,ஏப்.18: திருவாடானையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானையில் உள்ள தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யூனியன் அலுவலகம், ஒருங்கிணைந்த கீழமை நீதிமன்றம், அரசு மருத்துவமனை, துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பேருந்து நிலையம், பாரதிநகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு கலைக்கல்லூரி, கல்லூர் பேருந்து நிறுத்தம், சின்னக் கீரமங்கலம் ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இதேபோல் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னக்கீரமங்கலம் பகுதியில் மின்வாரிய அலுவலகம், ரவுண்டானா பகுதி, தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சப்பட்டு வருகின்றனர்.
ஒரு சில சமயங்களில் மாடுகள் சண்டையிட்டு முட்டிக் கொள்வதோடு சாலையின் குறுக்கே தெரித்து ஓடுவதால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் மீது அந்த மாடுகள் விழுந்து விபத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை குலைந்து கீழே விழுந்து படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல வேண்டிய சூழல் நிலவுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வருடத்தில் இந்த தொண்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சாலையின் குறுக்கே திடீரென கூட்டமாக செல்லும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு 10க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
The post திருச்சி-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கால்நடைகள் appeared first on Dinakaran.
