×

கோர்ட் உத்தரவுபடி 22 மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டது மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில் முதல்முறையாக வழிபட்ட பட்டியலின மக்கள் l எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் வாக்குவாதம்

விழுப்புரம், ஏப். 18: விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன்கோயில் 22 மாதங்களுக்குப்பிறகு திறக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் முதன்முறையாக வழிபாடு செய்தனர். இதற்கு ஒருசமூகத்தை சேர்ந்த ெபண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தர்மராஜா திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 7ம்தேதி நடைபெற்ற திருவிழாவின்போது பட்டியலினமக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய சென்றனர். உடனே அவர்களை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்தனர். தொடர்ந்து இருதரப்பு பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து கோட்டாட்சியர் உத்தரவுபடி கோயில் மூடி சீல்வைக்கப்பட்டது. அப்பகுதியில் தடைஉத்தரவும் போடப்பட்டது.

பின்னர் ஆட்சியர், எஸ்பி தலைமையில் இருசமூகத்தினரை அழைத்து பலகட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில் கடந்த 2024ம்ஆண்டு மார்ச் 18ம் தேதி முதல் கோயில் திறக்கப்பட்டு பொதுமக்களின்றி ஒருகால பூஜை நடத்தப்பட்டு வந்தது. வழிபாட்டு உரிமை தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் பொதுநலவழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்றும் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானகூட்டம் நடத்தி நீதிமன்ற உத்தரவுகளை இருசமுதாயத்தினருக்கும் தெரிவிக்க உத்தரவிட்டது. அதன்படி கடந்த 21ம்தேதி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இருசமுதாயத்தினரும் ஒன்றாக சாமிகும்பிட சம்மதித்தனர். பின்னர் நீண்ட காலமாக கோயில் பூட்டியிருந்ததால் கோயில்வளாகத்தை சுத்தப்படுத்தி சீரமைக்கவும், கோயில் வளாகத்தை சுற்றி சிசிடிவி கேமராக்கள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டு இதற்காக சிலநாட்கள் கோயிலை திறக்க அவகாசமும் வழங்கப்பட்டது.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் கோயில் திறக்கப்பட்டு ஒருகால பூஜை நடத்தப்பட்டது. இதனையொட்டி அதிகாலை முதலே மேல்பாதி கிராமத்தில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் முன்னிலையில் கோயில் திறக்கப்பட்டு வழிபாடு நடந்தது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஏஎஸ்பி ரவீந்திரகுமார் குப்தா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கோயில் நடைதிறக்கப்பட்டதும் பட்டியலின மக்கள் முதன்முறையாக திரௌபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். இதனை யாரும் புகைப்படம், வீடியோ எடுக்காமலிருக்க அவர்களிடம் செல்போன் அனுமதிக்கப்படவில்லை.

கோயில்திறந்து வழிபாடு செய்த ஒருமணிநேரத்திற்குபிறகு காலை 7.30 மணியளவில் கோயில் நடைவழக்கமாக அடைக்கப்பட்டது. இதனிடையே மேல்பாதிகிராமத்தில் மற்றொரு சமூகத்தினர் பட்டியலின மக்கள் வழிபாடுசெய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் போலீசாரும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பினர்.

தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை, மாலை 2 வேளையும் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். மற்ற நாட்களில் வழக்கமாக ஒருகால பூஜைகள் நடைபெறும். பொதுமக்கள் கோயிலுக்கு சென்று வழிபடலாம் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ததால் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும் மற்றொரு சமூகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனால் தொடர்ந்து அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நல்லநாள் பாரக்கவில்லை மேல்பாதியை சேர்ந்த பெண்கள் நல்ல நாள்பார்த்து கோயிலை திறக்கவில்லை என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 ஆண்டுகளுக்குப்பிறகு கோயில் திறக்கப்பட்டுள்ளது. நாங்கள் வெள்ளிக்கிழமை திறக்க வேண்டுமென்று கூறினோம். ஆனால் நல்லநாள் பார்க்காமல் அதிகாரிகள் வேண்டுமென்றே முன்கூட்டியே கோயிலை திறந்துவிட்டார்கள் என்றுகூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இடித்துவிட்டு புதிய கோயிலை கட்டுவோம் விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரவுபதிஅம்மன் கோயிலில் மற்றொரு சமூகத்தினர் வழிபாடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மேல்பாதி கிராமபெண்கள் மற்றும் இளைஞர்கள், நாங்கள் கட்டிய இந்த கோயிலில் வழிபாட்டு உரிமையை அதிகாரிகள் எப்படி முடிவு செய்யலாம். இந்த கோயிலை நாங்கள் இடித்துவிட்டு புதிய கோயிலை கட்டுவோம் என்று தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவை மதியுங்கள் மேல்பாதிகிராமத்தில் திரவுபதிஅம்மன்கோயில் பட்டியலினமக்கள் வழிபாடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் அங்குதிரண்டனர். அவர்களை ஏடிஎஸ்பி தினகரன் தலைமையிலான போலீசார் தடுத்துநிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏடிஎஸ்பி கூறுகையில், சண்டையிலேயே குறியாக இருக்காதீர்கள். நீங்கள் செய்வது சட்டவிரோதமான செயல். இதேபோல் போராட்டம் செய்தால் கைது செய்யப்படுவீர்கள். நீதிமன்ற உத்தரவை மதித்து செல்ல வேண்டுமென அறிவுரைகூறி அனுப்பி வைத்தார்.

The post கோர்ட் உத்தரவுபடி 22 மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டது மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில் முதல்முறையாக வழிபட்ட பட்டியலின மக்கள் l எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Melpathi Draupadi Amman ,Villupuram ,Draupadi Amman temple ,Melpathi village ,Villupuram district ,Caste ,Melpathi Draupadi Amman temple ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை