நத்தம், ஏப். 18: நத்தம் தாலுகாவில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் சரவணன் பல்வேறு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். செந்துறை ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல் அறிவு, வாசிப்பு திறன் பற்றி கேட்டறிந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். காலை உணவு திட்ட பொருட்கள் வைப்பறையை பார்வையிட்டு அங்கு உணவு தயார் செய்வதற்கான பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார். செந்துறையில் கடந்த காலங்களில் கட்டப்பட்டு இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ள பஸ்நிலையத்தை பார்வையிட்டு அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். தொடர்ந்து கலைஞரின் கனவு இல்லம் திட்ட பணிகள், அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சத்துணவு தயார் செய்யும் பணி, முறையாக முட்டை வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
பின்னர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் சரியாகவும் சிகிச்சை வழங்கப்படுகிறதா என கேட்டறிந்து வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். குடகிப்பட்டி ஊராட்சி மணக்காட்டூரில் செயல்பட்டு வரும் நலவாழ்வு மையம், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கற்றல் திறன் பற்றி கேட்டறிந்தார். அங்கு கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டுமான பணிகள், பாலப்பட்டி பகுதியில் நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைய உள்ள இடம் தேர்வு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சிறுகுடி ஊராட்சியில் வல்லமுத்து நாயக்கன் குளத்தில் வண்டல் மண் எடுத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பணிகள், நர்சரி, புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள சமுதாய கூடத்தில் பல்துறை அலுவலர்களுடன் கலந்துரையாடி நத்தம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், அவற்றை விரைவில் முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் நாகராஜன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராஜா, தாசில்தார் பாண்டியராஜன், ஒன்றிய ஆணையாளர் குமாரவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மகுடபதி, பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, செயல் அலுவலர் விஜயநாத் மற்றும் வருவாய், ஊரக வளர்ச்சி, நகர்புறம், சுகாதாரம், பொதுப்பணி, கால்நடை பராமரிப்பு, கல்வி, வேளாண்மை என பல்துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post நத்தம் தாலுகாவில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் appeared first on Dinakaran.
