சென்னை: தமிழக சட்டசபையில் இந்து அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்த பின் வெளியிட்ட அறிவிப்புகள்:
* கோயில் திருமண திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 1,000 இணைகளுக்கு கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தி வைக்கப்படும். மேலும், இணை ஒன்றுக்கு கூடுதலாக ரூ.10,000 சேர்த்து ரூ.70,000 மதிப்புள்ள சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்.
* ஒருகால பூசை திட்டத்தின் கீழ் ஏற்கனவே 18,000 கோயில்கள் பயனடைந்து வருகின்றன. இவ்வாண்டு மேலும், 1,000 கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.25 கோடி அரசு மானியமாக வழங்கப்படும்.
* ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 19,000 கோயில்களுக்கு பூஜைகள் செய்திட பூஜை உபகரணங்கள் ரூ.15 கோடி செலவில் வழங்கப்படும்.
* இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உள்ள 70 ஓதுவார் காலிப் பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும்.
* கோயில்கள் சார்பில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயின்று சான்றிதழ் பெற்ற ஓதுவார்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட 45 ஓதுவார்களில் 11 பெண் ஓதுவார்கள் என்பது பெருமைக்குரியது.
* 10 கோயில்களில் இறை தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களின் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ஆண்டிற்கு ரூ.50 லட்சம் செலவிடப்படும்.
* இறை தரிசனத்திற்கு வருகின்ற மாற்றுதிறனாளிகளுக்கு கோயில்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் இல்லை, வின்ச் மற்றும் ரோப் கார்களில் கட்டணம் இல்லை, இறை தரிசனத்திற்கும் கட்டணம் இல்லை.
* சிறுவாபுரி, பாலசுப்பிரமணியசுவாமி கோயில் சாலை விரிவாக்கத்திற்கு ரூ.67 கோடி, திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாற்று மலைப்பாதைக்கு ரூ.57.50 கோடி, பண்ணாரி மாரியம்மன் கோயிலில் தார்சாலை அமைக்க ரூ.3.50 கோடி, திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் படிவழிப்பாதை அமைக்க ரூ.1.90 கோடி மானியமாக வழங்கப்படும்.
* கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.4,000த்திலிருந்து ரூ.5,000 ஆக உயர்வு, துறைநிலை குடும்ப ஓய்வூதியம் ரூ.2,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* திருவண்ணாமலை, பழனி, திருவல்லிக்கேணி ஆகிய கோயிலில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டணத் தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருச்செந்தூர், திருவரங்கம், ராமேஸ்வரம், மதுரை , வடலூர் உள்ளிட்ட பத்து கோயில்களில் முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்களுக்கான தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும்.
* காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ஆகிய 2 கோயில்கள் சார்பாக செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும். ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் சார்பாக கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி அமைக்கப்படும். மருதமலை, சுப்பிரமணியசுவாமி கோயில் சார்பாக பல்தொழில்நுட்ப கல்லூரி (பாலிடெக்னிக் கல்லூரி) அமைக்கப்படும்.
The post திருவிழா நாட்களில் கோயில்களில் தரிசன கட்டணம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.
