×

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்யக் கோரி வரும் 21ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்: மின்ஊழியர் மத்திய அமைப்பு அறிவிப்பு

சென்னை: சென்னை அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு அலுவலகத்தில் அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ஒன்றிய அரசு, மாநில அரசையும் மின்வாரியத்தையும் நிர்பந்திக்கிறது. தமிழகத்தில் தற்போது, 3 லட்சம் மீட்டர்களை மொத்த செலவின முறையில் முறையில் மாற்ற உள்ளனர். இதற்கு ரூ.475 கோடி செலவாகும். இதில் ஒன்றிய அரசு ரூ.52 கோடியை மட்டுமே மானியமாக வழங்கும். இதனால் வாரியத்தின் கடன் சுமை மேலும் 423 கோடி ரூபாய் அதிகரிக்கும். இந்த 3 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை வாரியமே கொள் முதல் செய்து வாரிய ஊழியர்கள் மூலம் பொருத்தி பராமரித்தால் 175 கோடி மட்டுமே செலவாகும்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 3.40 கோடி மின் இணைப்புகளையும் மாற்றினால் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இந்த பணி 2, 3 ஆண்டுகளில் நிறைவடையும். இந்த ஒப்பந்தத்தை எடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும். கேரள இடதுமுன்னணி அரசு ஒன்றிய அரசு குறிப்பிட்ட டோடெக்ஸ் முறையை நிராகரித்து, மூலதனச் செலவு முறையை செயல்படுத்துகிறது. கேரளாவைப் போன்றே தமிழக அரசும் மூலதனச் செலவு முறையை பின்பற்ற வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால், மீட்டர் வாடகையை நுகர்வோர் செலுத்த வேண்டி வரும். 7 ஆண்டுகளுக்கு பிறகு புது மீட்டர் மாற்றினாலும், அதற்கான கட்டணத்தையும் நுகர்வோரே செலுத்த வேண்டும்.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் கணக்கீட்டு பிரிவு பணியாளர்கள் வேறு பணிக்கு மாற்றப்படுவார்கள். படித்த இளைஞர்களின் அரசு வேலை கனவு பறிபோகும். எனவே தமிழக அரசு, டோடெக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி ஏப்.19 தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கமும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஏப்.21ல் வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் தர்ணாவும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அமைப்பின் தலைவர் ஜெய்சங்கர், பொருளாளர் வெங்கடேசன் உடனிருந்தனர்.

The post ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்யக் கோரி வரும் 21ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்: மின்ஊழியர் மத்திய அமைப்பு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,Electricity Board Central Organization ,Chennai ,Tamil Nadu Electricity Board Central Organization ,Anna Salai Electricity Board ,Chennai, Rajendran ,general ,Union government ,Dinakaran ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...