- வீரபாண்டி முல்லையாறு ஆற்றுப்படுகை
- பிறகு நான்
- வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்
- குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
தேனி, ஏப். 17: தேனி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா மையங்கள் உள்ள நிலையில் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயில் ஆகியவையும் சிறந்து விளங்குவதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேனி மாவட்டத்திற்கு ஆன்மீக சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் மாவட்டத்தில் மிகச்சிறப்பு வாய்ந்த கோயிலாக உள்ளது. அமாவாசை தினங்களில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி செய்வதற்கு ஏற்ற இடமாக வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் முல்லையாற்றுப்பகுதி அமைந்துள்ளது. இதனால் முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும், தர்ப்பணம் செய்யவும் இக்கோயிலில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.
ஆடிப்பெருக்கு போன்ற நாட்களில் மாங்கல்யம் நிலைக்க தாலிப்பெருக்கும் வைபவங்களும் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் அருகே உள்ள முல்லையாற்றங்கரையில் நடப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், வீரபாண்டி முல்லையாற்றின் தடுப்பணை அருகே தற்போது திதி, தர்ப்பணம் கொடுப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதன்அருகே சுமார் 2 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு இடம் காலியாக ஆற்றின் கரையோரம் உள்ளது. இப்பகுதியில் ஆற்றின் கரையோரம் தடுப்புச் சுவர் கட்டி, தடுப்புச்சுவருக்கு அருகில் சிறுவர் பூங்கா, சிறிய அளவிலான நீச்சல் குளம் அமைத்து படகு குலாம் அமைக்க வேண்டும்.
சிறுவர் பூங்காவில் சிறுவர் விளையாட்டிற்கான சறுக்குகள், ஊஞ்சல்கள், ராட்டினங்கள் அமைத்தால், திருவிழா காலம் மட்டும் இல்லாமல் வீரபாண்டி வழியாக கேரளா செல்லும் பயணிகளில் வீரபாண்டி முல்லையாற்று தடுப்பணை அழகில் மயங்கி தடுப்பணைக்கு குளிக்க வரும் பயணிகள் மற்றும் வீரபாண்டியை சுற்றியுள்ள தேனி,போடி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீரபாண்டி கோயிலுக்கு வரும் போது தங்கள் குழந்தைகளுடன் சிறுவர் பூங்காவில் பொழுதுபோக்கி மகிழ்ச்சியுடன் செல்ல வாய்ப்பு உருவாகும் என்பதால் ஆற்றின் கரையோரம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து கடந்த 2024 ம் ஆண்டு அக். 1ம் தேதி தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இந்நிலையில் தற்போது வீரபாண்டி முல்லையாற்று தடுப்பணை அருகே உள்ள முல்லையாற்று படுகையில் பூங்கா அமைக்கும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக சுமார் 5 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தடுப்பணை மற்றும் திதி கொடுக்கும் இடத்திற்கு செல்லும் சாலையில் இருந்து தடுப்பணை வரை முல்லையாற்று படுகையை சமதளப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசியிடம் கேட்டபோது அவ ர் கூறியதாவது : பொதுப்பணித்துறை ஒத்துழைப்புடன், முல்லையாற்று படுகையில் சிறுவர் பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பூங்கா அமைய ஆதரவு தெரிவித்து நிதி மற்றும் உழைப்பு தருபவர்களை கண்டறிந்து அவர்கள் மூலமாக பூங்கா அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தடுப்பணைக்கு செல்லும் சாலையில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, இச்சாலையை அகலப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
தற்போது கவுமாரியம்மன் கோயில் சித்திரத் திருவிழா தொடங்குவதற்கான கம்பம் நடுதல் விழா முடிந்துள்ள நிலையில் வருகிற மே 6 முதல் மே 13 வரை சித்திரைத் திருவிழா நடக்க உள்ளது. அப்போது பூங்கா அமைக்கும் பணி நடப்பதில் சிரமம் இருக்கும் என்பதால் தற்போது பூங்கா அமைக்கத் தேவையான இடத்தில் தரைதளத்தை சமதளப்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருவிழா முடிந்ததும், இப்பகுதியில் ஆற்றின் கரையோரம் தடுப்புச் சுவர் கட்டி, தடுப்புச்சுவருக்கு அருகில் சிறுவர் பூங்கா, அழகிய பூச்செடிகளுடன் கூடிய பூங்கா, சிறுவர் விளையாட்டிற்கான சறுக்குகள், ஊஞ்சல்கள், கழிப்பறைகள், உடைமாற்றும் அறைகள் கட்டும் பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.
The post வீரபாண்டி முல்லையாற்று படுகையில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

