பெரம்பலூர், ஏப்.17: அரும்பாவூர் பேரூராட்சியில் நடந்து வரும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்டக் கலெக்டர் செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார்.
மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் ‘‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பேரூராட்சியில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேற்று (16ம் தேதி) நேரில் சென்று கள ஆய்வு மேற் கொண்டார். அரும்பாவூர் பேரூராட்சியில் மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.114 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேரூராட்சி அலுவலகத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அரும்பாவூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி மற்றும் பாரதி நகர் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.129.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர்வாய்க்கால் அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டார்.
அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ11.10 கோடி மதிப்பீட்டில், குடிநீர் கொண்டு செல்லும் மற்றும் குடிநீர் வழங்கும் 50 கி.மீ தூர பைப் லைன், 2 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, ஒரு தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டி, மற்றும் 2,981 நபர்களுக்கு தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு ஆகிய பணிகள் அடங்கிய குடிநீர் திட்ட பணிகளின் முன்னேற்ற நிலையை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சியின் செயல் அலுவலருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அரும்பாவூர் காவல் நிலையத்திற்கு சென்று பதிவேடுகளை ஆய்வு செய்து, வழக்கு விபரங்கள் குறித்து காவல் ஆய்வாளரிடம் கேட்டறிந்தார். பின்னர் திருட்டு வழக்கு தொடர்பாக மீட்கப்பட்டுள்ள பொருட்கள், நகைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். காவல் நிலையத்திற்கு வரும் பொது மக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொண்டு, அவருடைய புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்தினார். பிறகு அரும்பாவூர் பேரூராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை தொடர்பான மனுக்கள், விபரங்களை கேட்டறிந்து, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தி னார். மனு மீதான நடவடிக்கை குறித்து மனு தாரர்களுக்கு தெரியப்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அரும்பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்களின் வருகை மற்றும் பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், மதிய உணவின் தரம் குறித்து சாப்பிட்டுப் பார்த்து மாவட்டக் கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் அரும்பாவூர் குழந்தைகள் நல மையத்தினை ஆய்வு செய்த மாவட்டக் கலெக்டர் குழந்தை மையத்தில் மாணவர்களின் வருகை விபரம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாதந்தோறும் மாணவருடைய எடை, உயரம் கணக்கிட்டு பதிவுசெய்து அதற்கு ஏற்றார்போல் ஊட்டச்சத்து உணவுகளை வழங்கிட குழந்தைகள் நல மைய அமைப்பாளர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வுகளில் அரும்பாவூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் தியாகராஜன், பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை, தாசில்தார்கள் துரைராஜ், அனிதா, அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கயல்விழி, வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post அரும்பாவூர் பேரூராட்சியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்: கலெக்டர் கிரேஸ் பச்சாவ் கள ஆய்வு appeared first on Dinakaran.
