×

பாஜ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் வாழ்த்து: பேரவையில் இருந்து பாஜ வெளிநடப்பு


பேரவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பு மீது நடந்த விவாதத்தில் சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: ஜிஎஸ்டி சேவை வரியை பொறுத்தமட்டிலும், அது ஒரு தனி கவுன்சில். அதில் எல்லா மாநில நிதியமைச்சர்களும் கலந்து கொள்வார்கள். அந்தந்த மாநில வரி வருவாயில், 50 சதவிகிதம் அவர்களுக்கு நேரடியாகக் கொடுக்கப்படுகிறது. பிறகு மீதமிருக்கிறது 50 சதவிகிதத்தில் 29 சதவிகிதம் மாநில அரசுக்கு கொடுக்கப்படுகிறது. அதைத்தான் முதல்வர், 1 ரூபாயில் 29 சதவிகிதம் எங்களுக்கு கிடைக்கிறது என்கிறார். 29 சதவிகிதம் நேரடியாகவும், மறுபடியும் 79 சதவிகிதம் மாநில அரசுக்கு வருகிறது. ஜிஎஸ்டி காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே கொண்டு வரப்பட்டது.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): காங்கிரஸ் ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன ஜிஎஸ்டி வேறு.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: நயினார் நாகேந்திரன் தவறான கணக்கை இங்கே பதிவு செய்திருக்கிறார். ஜிஎஸ்டியில் 50 சதவீதம், 50 சதவிகிதம் எல்லாம் கிடையாது. சில பொருட்களுக்கு எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, சில பொருட்களுக்கு எஸ்ஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி. வெவ்வெறு ஜிஎஸ்டி வெவ்வெறு இடத்தில் பொருந்தும். 100 சதவிகிதம் சிஜிஎஸ்டியில் கலெக்ட் செய்கிற பணம் எல்லாம் நேர்முக வரியோடு கலந்து மொத்த ஒன்றிய அரசின் நிதி சேர்க்கையில் செஸ், சர்சார்ஜ் என்று ஒரு 25 சதவிகிதத்தை கழட்டிவிட்டு பாக்கியிருப்பதில் 42 சதவிகிதத்தை மாநிலத்திற்குக் கொடுக்கிறேன் என்று சொல்லி, அதில் 4 சதவிகிதம் நமக்கு வருகிறதே தவிர, இவர் சொன்ன கணக்கெல்லாம் எந்தக் கணக்கிலும் சேராது. 5 பைசாவுக்கு வரி செலுத்தினாலும், 5,000 கோடி செலுத்தினாலும் ஒரே அளவுக்கு ஓட்டுப்போட்டு, ஒரு மாநிலத்திற்கு ஒரு ஓட்டு என்று உலகத்தில் இல்லாத ஒரு முறையை கொண்டுவந்தது இந்த ஜிஎஸ்டி கவுன்சில். அதனால் இதை வைத்து கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த உதாரணம் என்று பேசவே கூடாது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: பாஜ கட்சியினுடைய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடிய நயினார் நாகேந்திரனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இங்கே பேசத் தொடங்கும்போதே என்னுடைய நினைவு சரியாக இருக்குமேயானால் என்று சொல்லிவிட்டுதான் பேசினார். அதனால் பெரிய பிரச்னை ஆக்க வேண்டிய அவசியமில்லை.

நயினார் நாகேந்திரன்: முதல்வர் வாழ்த்துக்கு எனது மனமார்ந்த நன்றி. அது இன்று, நேற்றல்ல. கொரோனா காலகட்டத்திலிருந்து எல்லா காலங்களிலும், நான் நோய்வாய்ப்பட்டிருந்த நேரத்திலேகூட தொலைபேசியில் அழைத்து எனக்கு, எப்படியிருக்கிறீர்கள், நன்றாக இருக்கிறீர்களா, உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நேற்றுகூட, தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அவருடைய பெருந்தன்மையை நான் உண்மையிலேயே மனதாரப் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன். இத்தகைய ஒரு நாகரீகமான அரசியலுக்காக.

அமைச்சர் தங்கம் தென்னரசு: இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நயினார் நாகேந்திரனுக்கு நினைவு மிக சரியாகவே இருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன்.

நயினார் நாகேந்திரன்: நீட் தேர்வை பொறுத்தமட்டிலும் அது யாருடைய ஆட்சிக்காலத்திலே இருந்தது. அன்றைக்கு திமுக, காங்கிரஸ் கட்சி ஆட்சியிலே இருந்த சமயம். அது 2010ம் ஆண்டே கொண்டுவரப்பட்டது.

செல்வப்பெருந்தகை: காங்கிரஸ் நீட் நுழைவு தேர்வை கொண்டு வரவில்லை. உச்ச நீதிமன்றம்தான் கொண்டு வந்தது. சங்கல்ப இயக்கத்தின் முயற்சியால் நீதிமன்றம்தான் கொண்டு வந்தது.

நயினார் நாகேந்திரன்: 2010ம் ஆண்டில் அவர்கள் கொண்டு வரவில்லையென்றாலும், அவர்கள் ஆட்சியில் இருந்தார்கள் என்பதையாவது அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். மும்மொழி கொள்கையினை பொறுத்தமட்டிலும், இந்தி திணிப்பு, இந்தி திணிப்பு என்று சொல்கிறார்கள். அவர்கள் இந்தியை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று சொல்லவில்லை. இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை தேர்ந்தெடுங்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இங்கே அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ேக.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகிய அனைவருமே தெலுங்கு பேசுவார்கள். நம்முடைய முதல்வர் கூட கேரள மாநிலம் சென்றிருந்தார். அங்கு மலையாளத்தில் பேசினார். நான் அதை பார்த்தேன். உண்மையிலே அழகாக, அற்புதமாக இருந்தது. (அப்போது நயினார் நாகேந்திரன் தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் பேசினார்.)
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அதை தமிழில் எழுதி வைத்துவிட்டுதான் படித்தேன்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: நயினார் நாகேந்திரன், பன்மொழிப்புலவராக ஆகி, இன்றைக்கு அவர் பல மொழியில் இங்கே பேசிக் கொண்டிருப்பதை பார்த்தால், அவர் மாநில தலைவராகி, அடுத்து தேசிய தலைவராக ஆவதற்கான முயற்சியிலே இப்போது பலமான அடித்தளத்தை இட்டுக்கொண்டிருக்கிறார் என்று நான் கருதுகிறேன்.

நயினார் நாகேந்திரன்: இந்திய நாடு வல்லரசு நாடாக மாறக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்ற காரணத்தால், இந்த மாதிரி ஒட்டுமொத்தமாக சுயாட்சி வரும்போது, அது அந்த நாட்டினுடைய வலுவானது குறைவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல, எதுவானாலும் ஒன்றிய அரசு நம்மை கேட்டு, எது சரி, எது தவறு என்று கேட்டு ஒரு முடிவு எடுக்கவேண்டுமே தவிர, இந்த மாதிரி ஒட்டுமொத்தமாக சுயாட்சி வேண்டுமென்று கேட்பது நியாயமல்ல, சரியல்ல. அதனால் முதல்வர் கொண்டு வந்த விதி 110-ன்கீழ் அறிக்கையை நாங்கள் ஏற்க இயலாது, வெளிநடப்பு செய்கிறோம். (தொடாந்து பாஜக உறுப்பினர்கள் 4 பேரும் வெளிநடப்பு செய்தனர்).

எஸ்.எஸ்.பாலாஜி (விசிக): நயினார் நாகேந்திரன் ஆரம்பிக்கும்பொழுதே அம்பேத்கரை குறிப்பிட்டு, ஏதோ மாநில சுயாட்சிக்கு அம்பேத்கர் எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தார் என்பதுபோல தெரிவித்திருக்கிறார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாகவே, 1929, மே 17 சைமன் கமிஷனிடம் ஒரு அபிடவிட் தாக்கல் செய்தார். அதில் மாநில அரசுகளுக்கு சுயாட்சி இருக்க வேண்டும். அதிகாரமும் பொறுப்பும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றார். அம்பேத்கர் கருத்து என்பது மாநில சுயாட்சிக்கு ஆதரவானது என்பதுதான். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post பாஜ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் வாழ்த்து: பேரவையில் இருந்து பாஜ வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Nayinar Nagendran ,President of ,Bahia ,Bajaj ,K. ,Stalin ,Assembly Speaker ,President ,Berawa ,
× RELATED கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி...