×

கைதிகள் தயாரிக்கும் ஷூக்கள் ஐடி ஊழியர்களுக்கு விற்பனை

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் ஷூக்களை சென்னையில் உள்ள ஐடி கம்பெனி ஊழியர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் என்பது தண்டனைக்குரிய இடங்களாக இல்லாமல் சீர்திருத்தும் பள்ளிகளாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சிறைகளில் இருந்து கைதிகள் விடுதலையான பிறகு அவர்களது எதிர்காலம் பாதிக்காமல் இருக்க பல்வேறு தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

மேலும் கைதிகளின் மனமாற்றத்துக்கான நூலகம், விளையாட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, மத்திய சிறைகளில் உள்ள நன்னடத்தை கைதிகள் ஷூ தயாரிப்பு, தையல், சோப்பு, பேக்கரி, விவசாயம், மீன் வளர்ப்பு, தச்சு, முடி திருத்தகம் உள்ளிட்ட பல்வேறு சுயதொழில்கள் செய்து வருகின்றனர். வேலூர் மத்திய சிறையில், உள்ள நன்னடத்தை கைதிகள் போலீசாருக்கான ஷூக்கள் தயாரித்து வழங்கி வந்தனர். இதன்மூலம் ஷூ தயாரிப்பில் உள்ள கைதிகள் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் ஊதியம் பெறுகின்றனர்.

இதற்கிடையில், கைதிகள் தயாரிக்கும் ஷூக்களை போலீசாருக்கு மொத்தமாக கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த ஷூக்களை போலீஸ் கேன்டீன் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், கைதிகள் தயாரித்த ஷூக்கள் சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனி ஊழியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மற்ற ஐடி கம்பெனி ஊழியர்களுக்கு ஷூக்கள் விற்பனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கைதிகள் தயாரிக்கும் ஷூக்கள் போலீசார் மட்டுமின்றி பொதுமக்களுக்கு விற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு, சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் 150 ஷூக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை தீவுத்திடலில் கண்காட்சியில் கைதிகள் தயாரித்த ஷூக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல டிசைன்களில் ஷூக்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெல்ட், மணிபர்ஸ், லேதர் பேக், லேடிஸ் பை, லேப்டாப் பேக் உள்ளிட்டவை தயாரித்து விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

The post கைதிகள் தயாரிக்கும் ஷூக்கள் ஐடி ஊழியர்களுக்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore Central Jail ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...