×

செல்வப்பெருந்தகை பிறந்தநாள் போஸ்டரால் பரபரப்பு 15 நாட்களில் விளக்கமளிக்க காங்கிரஸ் பிரமுகருக்கு நோட்டீஸ்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் மாநில செயலாளர் ஏ.வி.எம். ஷெரிப் பெயரில் சென்னையில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் செல்வப்பெருந்தகையின் புகைப்படம் இடம்பெற்ற போஸ்டரில் ‘2026ன் துணை முதல்வரே’ என்ற வாசகமும், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போஸ்டர் குறித்து விளக்கம் அளிக்கும்படி ஷெரிப்பிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்த மதவாத தீய சக்திகள் கூடுதலாக நமது ஒற்றுமையை குலைக்க பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒற்றுமையாக இருக்கும் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடும், ஒற்றுமையை கெடுக்கின்ற வகையிலும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் தங்களுடைய வாசகங்கள் இடம்பெற்றுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கூட்டணி பற்றி பேசுவதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே அனைத்து அதிகாரமும் உள்ளது. உங்களுடைய இந்த அநாகரிகமான செயல் கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறியதோடு ஒரு ஒழுங்கீனமான செயலாகும். நான் ஏற்கனவே அறிவித்துள்ளபடி, நமது மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 7 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று தெளிவாக கூறியுள்ளேன். இதனை மீறி எனது பிறந்தநாளை முன்னிட்டு தங்களுடைய இந்த சுவரொட்டி செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதோடு, ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டதாகும். உங்களுடைய இந்த செயலுக்கு தகுந்த விளக்கத்தை 15 தினங்களுக்குள் எழுத்துபூர்வமாக நேரில் வந்து விளக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post செல்வப்பெருந்தகை பிறந்தநாள் போஸ்டரால் பரபரப்பு 15 நாட்களில் விளக்கமளிக்க காங்கிரஸ் பிரமுகருக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Congress ,Chennai ,Tamil ,Nadu ,President ,Secretary of State ,A. V. M. ,Deputy Prime Minister ,Speaker ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...