×

ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால் கட்டணம் வசூலிக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரயில்களில் பல கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள். பேருந்து கட்டணத்தை விட மிகவும் குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளோடு ரயில்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அதிகளவு ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள்.

படுக்கை வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன. மேலும் நீண்ட தூர ரயில்களில் உணவகமும் செயல்படுகிறது.  இந்த சூழ்நிலையில் ரயிலில் பயணிக்கும் பயணிகள் மூட்டை மூட்டையாக, பெட்டி பெட்டியாக லக்கேஜ்களை கொண்டு வருகிறார்கள். இதனால் ரயில்களில் மற்ற பயணிகள் பாதிக்கப்படுவதோடு ரயில்களை இயக்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ரயில்களில் லக்கேஜ்களை கொண்டு செல்ல தெற்கு ரயில்வே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அந்த வகையில் ரயில் பயணிகளின் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் விதிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடை கொண்ட லக்கேஜ்களை எடுத்து செல்பவர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் தொடர்பான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், ஏ.சி. முதல் வகுப்பு பயணிகள் 70 கிலோ வரையிலும், ஏ.சி. 2ம் வகுப்பு பயணிகள் 50 கிலோ வரையிலும், ஏ.சி. 3ம் வகுப்பு பயணிகள் 40 கிலோ வரையிலும், முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகளில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையிலும், 2ம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரையிலும் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான லக்கேஜ் எடுத்து வரும் பயணிகளுக்கு ஒவ்வொரு 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைக்கு 1.5 மடங்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டிக்கெட் பரிசோதகர்கள் கண்காணிப்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால் கட்டணம் வசூலிக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Southern Railways ,Chennai ,India ,Kashmir ,Kanyakumari ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...