×

அன்புமணியை நீக்கியது சரியே ராமதாஸ் பிடிவாதத்தால் சமாதான முயற்சி தோல்வி: என்னை சந்திக்க வர வேண்டாம் என நிர்வாகிகளிடம் கறார்; அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? குடும்பத்தினர் ஆலோசனை

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மூத்த மகளான காந்திமதியின் மகன் முகுந்தனை மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிப்பதாக அறிவித்தார். இதற்கு அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த ராமதாஸ், தான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கட்சியை விட்டு போகலாம் என்றும் தெரிவித்தார். அப்போது, அன்புமணி ராமதாஸ் சென்னை பனையூரில் தனக்கு ஒரு அலுவலகம் வைத்துள்ளதாகவும், அங்கே தன்னை வந்து பார்க்கலாம் எனவும் கூறி செல்போன் எண்ணை மேடையிலேயே கூறினார். இதனால் பாமகவில் பிளவு ஏற்பட தொடங்கியது.

இந்நிலையில், அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ராமதாஸ் அறிவித்தார். இனி நானே தலைவர், அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என்றும் கூறினார். ராமதாசின் இந்த அறிவிப்பு பாமகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து சமாதான பேச்சு நடத்துவதற்காக பாமக வழக்கறிஞர் பாலு, தர்மபுரி முன்னாள் எம்.பி. செந்தில்குமார், சேலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், பசுமைத்தாயகம் அருள் ஆகியோர் வந்தனர்.

அவர்கள் இரவு வரை சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தனர். ஆனால், ராமதாஸ் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து ஏமாற்றத்துடன் புறப்பட்டு சென்றனர். பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தீர்களா என செய்தியாளர்களின் கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காமல் புறப்பட்டு சென்றனர். ஏற்கனவே சென்னையில் அன்புமணி ராமதாசை சந்தித்து பேசிய நிலையில், அவர்கள் தைலாபுரம் தோட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்திருந்த போதுதான் இவர்களை ராமதாஸ் சந்திக்க மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பாமக தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை சந்திக்க வரவேண்டாம் என்று ராமதாஸ் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தைலாபுரம் தோட்டத்திலிருந்து தகவல் வெளியானது. இதனால் தைலாபுரம் தோட்டமே வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து ராமதாசின் பிடிவாதத்தால் சமாதான முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் சித்திரை தமிழ் புத்தாண்டு நாளில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தைலாபுரம் தோட்டத்துக்கு வருவார்கள். தற்போது ராமதாஸ் தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று கூறியுள்ள நிலையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது குடும்பத்தினர் மட்டும் கார்களில் தோட்டத்திற்கு சென்று வருகின்றனர். தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரிவால் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் அவரது மகள்கள்  காந்தி, கவிதா குடும்பத்தினரும், சென்னை இசிஆர் பனையூரில் உள்ள அன்புமணி வீட்டில், அவரது மனைவி சவுமியா, மருமகன் உள்ளிட்டோரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அன்புமணியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையை ராமதாஸ் ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல், நான் எடுத்த முடிவு சரியானது தான் என கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். ராமதாஸ் தனது முடிவை, மாற்றிக்கொள்வது போல் தெரியவில்லை. அன்புமணியும் இதுகுறித்து இன்னும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. என்னை சமாதானப்படுத்தும் நோக்கில் கட்சியினர் சந்திக்க வர வேண்டாம் என்று பாமக முக்கிய நிர்வாகிகளிடம் ராமதாஸ் கறாராக தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது. ஆனாலும், குடும்பத்தினரும், கட்சி நிர்வாகிகள் சிலரும் அன்புமணிக்காக ராமதாசிடம் சமாதானம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, சமூக வலைதளங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாமக பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணி என்றும் அவர்தான் பாமகவுக்கு தலைவர் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஜி.கே.மணி திடீர் சந்திப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் ராமதாசை பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி சந்தித்து சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தன்னை சந்தித்து அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியது குறித்து யாரும் பேசக்கூடாது, நிர்வாகிகள் தோட்டத்திற்கு வராதீர்கள் என ராமதாஸ் கூறிய நிலையில் மாநாடு குறித்து ஜி.கே.மணி பேசியதாக கூறப்படுகிறது. மேலும் குடும்பத்தினரில் மூத்த மகள் காந்திமதி பேரன் முகுந்தன் மற்றும் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் ஆகியோரை மட்டும் ராமதாஸ் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

The post அன்புமணியை நீக்கியது சரியே ராமதாஸ் பிடிவாதத்தால் சமாதான முயற்சி தோல்வி: என்னை சந்திக்க வர வேண்டாம் என நிர்வாகிகளிடம் கறார்; அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? குடும்பத்தினர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Ramadoss' ,Tindivanam ,PMK ,New Year ,Pattanur, Villupuram district ,Ramadoss ,Gandhimati ,Mukundan ,Dinakaran ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்