×

அன்புமணி நீக்கத்தில் உறுதி: நிர்வாகிகளை சந்திக்க மறுக்கும் ராமதாஸ்

திண்டிவனம்: அன்புணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதில் உறுதியாக உள்ள ராமதாஸ், தன்னை சமாதானம் செய்ய வரும் பாமக நிர்வாகிகளை சந்திக்க மறுத்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பட்டானூரில் பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த டிசம்பர் 28ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தின்போது பாமக இளைஞரணி மாநில தலைவராக முகுந்தன் பரசுராமனை ராமதாஸ் அறிவித்ததை அன்புமணி எதிர்த்ததால் ராமதாசுக்கும், அவருக்கும் மோதல் ஏற்பட்டது. அன்புமணியும் தைலாபுரம் வருகையை பெரும்பாலும் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முன்தினம் பாமக தலைவராக நான் பொறுப்பு ஏற்று இருக்கிறேன். நிறுவனரும் நான்தான். அன்புமணி செயல் தலைவராக மட்டுமே இருப்பார். ஜிகே மணி கவுரவ தலைவராக தொடர்வார் என்று தெரிவித்தார். ராமதாசின் இந்த திடீர் அறிவிப்பு அன்புமணி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திண்டிவனத்தில் உள்ள ராமதாஸ் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டினர். அன்புமணி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற பரபரப்பு அக்கட்சியில் ஏற்பட்டுள்ளது.

ராமதாசை சமாதானப்படுத்த குடும்பத்தினர் எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதனிடையே நேற்று முன்தினம் தோட்டத்துக்கு வந்த கட்சியின் பொருளாளர் திலகபாமாவை சந்திக்க ராமதாஸ் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் ராமதாசை சந்திப்பதற்காக நேற்று மாலை தைலாபுரம் தோட்டம் வந்திருந்த பாமக வழக்கறிஞர் பாலு, தர்மபுரி முன்னாள் எம்பி செந்தில்குமார், சேலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், பசுமைத்தாயகம் அருள் ஆகியோர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் அவர்களை சந்திக்க ராமதாஸ் மறுத்துவிட்டார்.

சமாதான முயற்சியாக பாமக சீனியர் தலைவர்கள் அடிக்கடி ேதாட்டத்துக்கு படையெடுப்பதால் கடுப்பான ராமதாஸ், தன்னை சந்திக்க நிர்வாகிகள் யாரும் தோட்டத்துக்கு வர வேண்டாம் என கண்டிப்பாக கூறிவிட்டார். யாரையும் உள்ளே விட வேண்டாம் என காவலர்களுக்கு உத்தவிட்டுள்ளதால். காவலர்கள் தோட்டத்துக்குள் எந்த நிர்வாகியையும் அனுப்பாமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

The post அன்புமணி நீக்கத்தில் உறுதி: நிர்வாகிகளை சந்திக்க மறுக்கும் ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Ramadoss ,Tindivanam ,PMK ,New Year ,Pattanur ,Vanur ,Villupuram ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்