தஞ்சாவூர், ஏப்.12: தற்ேபாது கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் பயணத்தின் போது கடுமையான வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. தீபகற்ப நாடான இந்தியாவில் மூன்று புறம் கடல்களாலும், மலைகளாலும் சூழப்பட்ட முழுமையான தீபகற்ப முனையை கொண்டுள்ள மாநிலமாக உள்ளது தமிழ்நாடு. அதனால் கலந்து பட்ட காலநிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. பனிக்காலத்தில் அதிக குளிரும், கோடை காலத்தில் அதிகப்படியான வெப்பமும் தமிழ்நாட்டில் பதிவாகும். குளிரைக் கூட நம்மால் எளிதாக கையாள முடியும். ஆனால் கோடை வெப்பத்தை தாக்குப்பிடிப்பது டஎன்பதுமிகவும் கடினமான ஒன்று. முழுமையாக கோடை காலம் இன்னும் தொடங்காத நிலையில் தற்போதே தமிழகத்தில் பல மாவட்டங்களில் நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.இப்படிப்பட்ட கோடை காலத்தில் கடுமையான வெப்ப அலையின் போது பயணங்களை குறிப்பாக பேருந்து பயணங்களை நாம் தவிர்ப்பது நல்லது.
ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் நாம் பேருந்து பயணங்கள் மேற்கொள்ள நேரிடும் போது, வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்காக சில முன்னேற்பாடுகளை செய்து கொள்வது மிகவும் நல்லது. அப்படிப்பட்ட சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கொட்ட நிர்வாகம். கும்பேகாணம் கோட்ட மேலாண் இயக்குனர் வழிகாட்டுதலின் பேரில் அனைத்து பேருந்து நிலையங்களிலும் வெப்ப பாதுகாப்பு ஆலோசனை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதை பயணிகள் வரவேற்றுள்ளனர். அந்த பதாகைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வெப்ப பாதுகாப்பு ஆலோசனைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்…
பயணிகள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் முடிந்த அளவுக்கு அடிக்கடி நீர் அருந்த வேண்டும். நேரடி வெப்பம் வெளிப்படுகின்ற நேரங்களில் தலையை பாதுகாக்க தொப்பி, துண்டு அணிந்து கொள்ள வேண்டும். பேருந்து நிலையங்களில் ேபருந்துக்காக காத்து நிற்கும் இடங்களில் நிழல் உள்ள இடங்களை தேர்வு செய்ய வேண்டும். நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும். போதிய ஓய்வு எடுக்க வேண்டும்.
காற்றோட்டம் மற்றும் ஒளி உள்ள இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும். வெப்பம் காரணமாக ஏற்படும் மயக்கம், தலைவலி, அதிகமான வியர்வை, போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற வேண்டும். அனைத்து பயணிகளும் கைவசம் ஓஆர்எஸ் எனப்படும் சத்து கரைசல் பாக்கெட்டுகளை வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஒரு பொட்டலத்தையாவது கையில் எடுத்துச் செல்ல வேண்டும். கடுமையான வெப்ப நிலையில் உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதை அருந்த வேண்டும். அதன் மூலம் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். இப்படி பல்வேறு ஆலோசனைகள் அந்த பதாகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல் பயணத்தின் போது, உடலை உற்சாகத்துடன் வைத்துக்கொள்வதற்காக, நீர்மோர், இளநீர், எலுமிச்சை சாறு, பழரசம், நுங்கு, பழங்கள் போன்றவற்றை பயணிகள் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் உடல் நலன்களைமுன் னிட்டு சமூக அக்கறையுடன் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மற்றும் பொது மேலாளர் இத்தகைய அறிவிப்புகள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைத்திருப்பதை தஞ்சை மாநகர பொதுமக்களும், கும்பகோணம் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பிலும் வரவேற்றுள்ளனர். மேலும் அன்றாடம் பணிக்கு வரும் ஓட்டுனர், நடத்துனர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பணிமனைகள் பேருந்து நிலையங்களில் நீர்மோர் மற்றும் வெட்டிவேருடன் கூடிய குடிநீர் வழங்கும்படியும், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நிலையங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுகாதாரமான முறையில் குடிநீர் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் போக்குவரத்து கழக நிர்வாகத்தை ஏஐடியுசி போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன், கும்பகோணம் சங்க பொதுச்செயலாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
The post கும்பகோணம் கோட்டத்தில் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பயணிகளுக்கு ஆலோசனைகள் appeared first on Dinakaran.
