நெல்லை, ஜன.12: பாளை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை, தச்சநல்லூர் சிவன் கோவில் தெற்குத் தெரு நாலு வீட்டு வளவு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (66). தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வருகிறது. இவரது மனைவி பேச்சியம்மாள் என்ற சுசீலா(64). சமையல் கலைஞரான இவர், கோயில்களில் உழவாரப் பணிகள் செய்து வந்தார். இவர் கடந்த 6ம்தேதி பாளை அடுத்த டக்கரம்மாள்புரம் அருகே உள்ள ஆயன்குளத்தில் உள்ள உறவினரை பார்க்க நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் சென்றார்.
ஆயன்குளத்தில் வந்து இறங்கிய அவர் பின்னர், இரவு 7.40 மணியளவில் அங்குள்ள நெல்லை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அதே வேளையில் வள்ளியூரில் இருந்து நெல்ைல நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார், பேச்சியம்மாள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த பேச்சியம்மாள் உயிருக்குப் போராடினார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த பாளையைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான டாக்டர் குருசாமி (62) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பாளை அருகே பரிதாபம்: சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி சாவு appeared first on Dinakaran.
