- பங்கூனி உத்தர விழா
- திருச்செந்தூர் முருகன் கோயில்
- வள்ளி திருகல்யாணம்
- திருச்செந்தூர்
- திருக்கல்யாணம்
- இறைவன்
- முருகன்
- வள்ளி
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்...

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை (11ம்தேதி) பங்குனி உத்திர திருவிழா விழாவையொட்டி இரவு முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதையொட்டி திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை (11ம்தேதி) பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு கோயிலில் இருந்து வள்ளியம்மன் தபசுக்கு எழுந்தருளி புறப்படுகிறார். மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதித்தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு வருகிறார். அதன்பிறகு சுவாமியும், அம்மனும் கீழ ரதவீதி, பந்தல் மண்டபம் முகப்பிற்கு வந்து, அங்கு வைத்து சுவாமிக்கும், வள்ளியம்மனுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்மனும் வீதி உலா வந்து திருக்கோயில் சேர்கின்றனர். இரவு சுவாமிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு 10 மணிக்கு கோயிலில் 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
இந்துக்கள் ஆண்டுதோறும் தமிழ் மாதமான பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று தங்கள் குல தெய்வ கோயில்களிலும், அவ்வாறு குல தெய்வம் தெரியாதவர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கமாகும். இதையடுத்து குலதெய்வ வழிபாடு செய்வதற்காகவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். அதனால் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருச்செந்தூருக்கும், குல தெய்வம் தெரியாத பக்தர்கள் குலதெய்வ வழிபாட்டுக்காக திருச்செந்தூர் முருகனை வழிபடவும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
குன்று மேலய்யன் சாஸ்தா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த உபகோயிலான நாலுமூலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், மின்சாரம், பந்தல் வசதி அனைத்தும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
The post நாளை பங்குனி உத்திர திருவிழா; திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்து வரும் பக்தர்கள்: இரவு வள்ளி திருக்கல்யாணம் appeared first on Dinakaran.
