×

திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறும் என இலவு காத்த கிளிகள் போல காத்திருக்கின்றனர்: திருமாவளவன் பேட்டி

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியே வரும் என இலவு காத்த கிளிகள் போல அதிமுக உள்ளிட்ட கட்சிகள் காத்திருப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி, எம்எல்ஏக்கள் சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, எம்.பாபு, முகமது ஷாநவாஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து, உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு எதிராகவும், தமிழ்நாடு அரசுக்கு சாதகமாகவும் அளித்த தீர்ப்பை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு திருமாவளவன் அளித்த பேட்டி:
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பலகலைக்கழகம் தொடர்பான மசோதாக்களை, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்து, கிடப்பில் போட்டு வைத்திருந்தார் ஆளுநர். இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதனடிப்படையில் தங்களுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, உச்சநீதிமன்றமே மசோதாக்களை சட்டமாக்கியுள்ளது. இதன்மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் பாடம் புகட்டியிருக்கிறது.

மீண்டும் நீட் விலக்கு மசோதாவை கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன். பாஜகவின் தயவு வேண்டும் என்பதற்காக தமிழக மக்களின் ஆதரவை இழக்கும் நிலைப்பாடுகளை அதிமுக எடுத்து வருகிறது. இதுபோன்று எடுக்கும் நிலைப்பாடுகள் மூலம் தமிழக மக்களிடம் இருந்து அதிமுக மெல்ல மெல்ல விலகி நிற்கிறது. அந்நியப்பட்டு கொண்டிருக்கிறது. அவர்களே அவர்களுக்கான சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

நீட் விலக்கு மசோதாவை சட்டப்பேரவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்புவதை தாண்டி வேறு என்ன ஆளுங்கட்சி செய்ய முடியும் என்பதை அதிமுக விளக்க வேண்டும். திமுக கூட்டணியில் கட்சிகள் வெளியே வரும், வெளியே வரும் என இலவு காத்த கிளிகள் போல காத்திருக்கின்றன. ஆனால் அவ்வாறு நிகழாததால் விரக்தியில் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளை குறித்து பேசுகிறது.

The post திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறும் என இலவு காத்த கிளிகள் போல காத்திருக்கின்றனர்: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dimuka alliance ,Thirumaalavan ,Chennai ,Ademuga ,Tamil Nadu ,Mu. K. Thirumavalavan ,Liberation Leopards Party ,Thirumavalavan ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்