×

இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்களின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை:காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். குமரி மாவட்டத்தில் பிறந்து, பெருந்தலைவர் காமராசரின் அடியொற்றி, காங்கிரஸ் பேரியக்கத்துக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட அவரது மறைவு தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். தனது அயராத உழைப்பால் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அவர், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொண்டாற்றினார். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டிய பெருமை இவரையே சாரும்.

அதனால்தான் தலைவர் கலைஞர் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், “தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழியை மாற்றி அமைத்துவிட்டார்” எனப் புகழாரம் சூட்டினார். தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்கு வாழ்ந்திட்ட அவரது பெருவாழ்வைப் போற்றி, அவருக்கு நமது அரசின் சார்பில் கடந்த ஆண்டு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி பெருமை கொண்டோம். விடுதலை நாள் விழாவில் அந்த விருதினை நான் வழங்கியபோது, என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு வாஞ்சையோடு உறவாடிய அவரது நினைவு என் கண்களில் கண்ணீரைப் பெருக்குகிறது.

ஏராளமான நூல்களையும் எண்ணற்ற மேடைகளையும் கண்ட அவரது தமிழால் நம் நெஞ்சங்களில் அவர் என்றும் நிறைந்திருப்பார் என ஆறுதல் கொள்கிறேன். ‘தகைசால் தமிழர்’ அய்யா குமரி அனந்தன் அவர்களது மறைவால் வாடும் அருமை சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள், காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள், அரசியல் மற்றும் இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த சொந்தங்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்களின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Ayya Kumari Anandan ,K. Stalin ,Chennai ,Ayyah Kumari Anandan ,Congress Bariakkam ,Tamil Nadu ,Kumari district ,Perundalaivar Kamarazar ,Congress ,Bharatiak ,Mu. ,
× RELATED மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து...