×

உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார், தீர்ப்பில் வென்று நிற்கிறார்: அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் பாராட்டு

சென்னை: உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார், தீர்ப்பில் வென்று நிற்கிறார் என்று அனைத்துக்கட்சி தலைவர்கள் பாராட்டினர். ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக): சட்டமன்றத்தில் 234 உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய பல தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல், கிடப்பில் போட்டிருந்தார். தற்போது நீதிமன்ற தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் இன்றைக்கு ஒன்றிய அரசினுடைய பிரதிநிதிகளாக இருக்கிற ஆளுநர்களுக்கும் ஒரு கடிவாளத்தை போட்டுள்ளது.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): இன்று வழங்கப்பட்டிருக்கிற தீர்ப்பு நிச்சயமாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் ஆளுநர் என்ற அந்த பொறுப்பே தேவையில்லாத ஒன்று.
சதன் திருமலைக்குமார் (மதிமுக): அனைத்து மாநில முதல்வர்களுக்கெல்லாம் கலைஞர் எவ்வாறு கொடி ஏற்றும் உரிமையை வாங்கிக் கொடுத்தாரோ, அதேபோன்று, முதல்வர் இப்போது ஆளுநருக்கு கடிவாளம் போட்டிருக்கிறார்.

வி.பி.நாகைமாலி (மார்க்சிய கம்யூ): தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்கிற இந்த தாரக மந்திரம் தமிழ்நாட்டில் மட்டும் முழங்கக்கூடிய தாரக மந்திரமாக இன்றைக்கு இல்லை. இந்திய நாடு முழுவதும் இந்த தாரக மந்திரத்தை எதிரொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முகமது ஷாநவாஸ் (விசிக): நீதிமன்றத்திற்கு சென்று இன்றைக்கு முதல்வர் தமிழ்நாடு அரசின் சார்பில் போராடி, வாதாடி வெற்றிபெற்று வந்துவிட்டார். ஆளுநர் தோற்றுவிட்டார்.

ஜி.கே.மணி (பாமக): மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்கிற உயர்ந்த நோக்கத்திற்காக முதல்வர், அரசின் சார்பிலே உச்ச நீதிமன்றம் சென்று, நல்ல தீர்ப்பை பெற்றிருப்பதாக இங்கே அறிவித்திருக்கிறார். இந்த தீர்ப்பு என்பது மாநில உரிமைகளை காக்கிற நடவடிக்கை.

எஸ்.பழனி நாடார் (காங்கிரஸ்): உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த தீர்ப்பினால் பல மாநிலங்களுக்கும் வாய்ப்பளித்து கொடுத்த தமிழ்நாடு முதல்வரை வாழ்த்தி, இப்படிப்பட்ட முதல்வர் இருக்கும்பொழுது மத்திய அரசு நம்மை ஒன்றுமே செய்ய முடியாது.

சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி: ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது; நாங்கள் சொல்லவில்லை. மாநில அரசுக்கு ஆளுநர் வீண் தடைகளை ஏற்படுத்தக்கூடாது, அது மக்கள் நலன்களை பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. முதல்வர் என்றைக்குமே சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளவர். ஏன் என்று சொன்னால், தான் செல்கின்ற பாதை நியாயமான, நேர்மையான பாதை. அந்த நேர்மையான, நியாயமான பாதை தனக்கு வெற்றியைப் பெற்றுத்தரும் என்பதில் உறுதியாக

உள்ளவர் முதல்வர். எனவேதான், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை இன்றைக்கு நமக்கு பெற்றுத் தந்திருக்கிறார்.
அவை முன்னவர் துரைமுருகன்: நான் இதில் பேசாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்மானம் வந்து இங்கே அவையில் பேசுகிறபோது பின்னாள் வரலாற்றில் இதை யார், யார் பாராட்டினார்கள் என்று ஒன்று வருமே! யார், யார் இந்த மனது இல்லாமல் கல் மனதாக இருந்தார்கள் என்று அதுவும் வருமே என்ற காரணத் தால் நான் பாராட்ட வேண்டுமென்று நினைக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக தளபதியை இளமையில் இருந்து தெரிந்தவன் என்கின்ற முறையில் அவருடைய தந்தையார் மடியிலே நான் வளர்ந்தவன் என்றாலும் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறது இது ஒன்று மட்டுமல்ல. காலையில் எழுந்து பத்திரிகை பார்த்தேன். உள்ளபடியே என் கண்கள் கலங்கிவிட்டது. காரணம், பொருளாதாரத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தை பெற்ற ஒரு பெரிய சாதனை இதுவரையில் எந்த முதலமைச்சரும் பெறாத சாதனையை தமிழ்நாட்டில் நிகழ்த்துகிறபோது அதற்காக வந்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, கை கொடுத்தேன்.

இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. இந்த இரட்டிப்பு மகிழ்ச்சியோடு நான் வந்து அமர்ந்திருக்கிறேன். மாநில சுயாட்சிக்காக கலைஞர் போராடினார். இன்றைக்கு அவரது மகன் கவர்னரே வேண்டாம் என்று சொல்கிறார். முதல்வர் உயர்ந்து நிற்கிறார். தீர்ப்பில் வென்று நிற்கிறார். ராஜராஜ சோழனுக்கு பிறகு ராஜேந்திர சோழன் கங்கை வரை சென்றதை போல முதல்வர் வெற்றியை அத்தகைய மகிழ்ச்சியாக கருதுகிறேன். சில மாநில கவர்னர்கள் தங்களை மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். என் தலைவர் கலைஞர் இன்றைக்கு இருந்திருந்தால் எப்படி பாராட்டுவாரோ, அவருடைய உணர்வை என் நெஞ்சில் தேக்கி வைத்திருக்கிறேன். அதை நினைத்து முதல்வரை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர்கள் பேசினார்.

The post உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார், தீர்ப்பில் வென்று நிற்கிறார்: அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,MLA K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA K. ,Stalin ,R. ISHWARAN ,KOMADEKA ,Chief Justice ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்