×

மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு ரூ.1.50 கோடியில் வெள்ளி கவச யானை வாகனம்: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்


சென்னை: ரூ.1.50 கோடி செலவில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெள்ளி கவச யானை வாகனத்தை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்துதல், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் 2024 – 2025ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், சென்னை மாவட்டம், கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் யானை வாகனத்திற்கு வெள்ளித் தகடு போர்த்தும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது,

இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் உற்சவர் புறப்பாட்டில் இருந்து வரும் மரயானை வாகனம் மற்றும் அதன் மீது பொருத்தப்படும் அம்பாரி ஆகியவற்றிற்கு உபயதாரர் நிதி ரூ.1.50 கோடி செலவில் 136 கிலோ 622 கிராம் எடையில் நகாசு வேலைகளுடன் வெள்ளித்தகடுகள் போர்த்தும் பணி முடிக்கப்பட்டு, இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெள்ளித் தகடுகள் போர்த்தப்பட்ட யானை வாகனம் மற்றும் அம்பாரியினை பங்குனிப் பெருவிழாவின் உற்சவ புறப்பாட்டின் பயன்பாட்டிற்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, ஆறுமுகம், இணை ஆணையர் கவெனிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு ரூ.1.50 கோடியில் வெள்ளி கவச யானை வாகனம்: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekarbabu ,Mayilapur Kapaleeswarar Temple ,Chennai ,Mylapore Kapaleeswarar Temple ,Hindu Religious Endowments Department ,Kodamuzhu ,Mayilapur Kapaleeswarar ,Temple ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...