×

குடியாத்தம் சிரசு திருவிழா முன்னிட்டு கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடப்பட்டது


குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழாவை முன்னிட்டு இன்று பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் ஒன்று. இக்கோயிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா வைகாசி மாதம் 1ம் தேதி நடைபெறும். இந்த திருவிழாவில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களி்ல் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்தாண்டு கெங்கையம்மன் சிரசு திருவிழா வரும் மே மாதம் 15ம் தேதி(வைகாசி 1ம் தேதி) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பால் கம்பம் நடும் நிகழ்ச்சி கெங்கையம்மன் கோயிலில் இன்று நடந்தது.

இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைதொடர்ந்து பால் கம்பத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பால்கம்பம் கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோயில் வளாகத்தில் நடப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பால்கம்பம் நடப்பட்டதை தொடர்ந்து சிரசு திருவிழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெறும். இதன் தொடர்ச்சியாக வரும் 30ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மே மாதம் 14ம் தேதி தேர் திருவிழாவும், 15ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும், 16ம் தேதி புஷ்ப பல்லக்கும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலசுப்பிரமணி, ஆய்வாளர் பாரி, செயல் அலுவலர் சிவக்குமார், நிர்வாகிகள் சம்பத் , பிச்சாண்டி, முன்னாள் அறங்காவலர்கள், திருப்பணி குழுவினர், மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

The post குடியாத்தம் சிரசு திருவிழா முன்னிட்டு கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Kenkayamman Temple ,Rattatam Sirasu Festival ,Sirasu Festival ,Paul Gampam ,Rattam Kenkayamman Temple ,Vellore district ,Rattam Kengayamman Shirasu Festival ,Rupatham Sirasu Festival ,
× RELATED கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன பேருந்தில் பயங்கர தீ விபத்து!!