×

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பங்கேற்பு


தாம்பரம்: மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீலியோமுத்து உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. கல்வி குழும தலைமை செயல் அலுவலர் அரிமா சாய் பிரகாஷ் லியோமுத்து தலைமை வகித்தார். தலைமை விருந்தினராக இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திராயன்-3 திட்ட இயக்குனருமான ப.வீரமுத்துவேல், சிறப்பு விருந்தினராக கிஸ்ப்ளோ நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் ப.வீரமுத்துவேல், எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு குறித்து விவரித்தார். சிறப்பு விருந்தினர் சுரேஷ் சம்பந்தம், பொறியியல் மாணவர்களுக்கு தற்போதைய சூழலில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கினார்.

ஸ்ரீசாய்ராம் கல்வி குழும தலைமை செயல் அலுவலர் அரிமா சாய் பிரகாஷ் லியோமுத்து பேசுகையில், ‘கடந்த 25 ஆண்டுகளாக எங்கள் நிறுவனம் ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக எஸ்டிஜி என்று சொல்லக்கூடிய நிலையான வளர்ச்சி இலக்குகள் கல்லூரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மாணவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், அவர்களை சமூகத்தின் ஒரு பகுதியாக மாற்றுகிறது. வேலையில்லாதவர்களின் வாழ்வாதரத்தை மாற்றும் வகையில், அருகிலுள்ள கிராமங்களை சாய்ராம் கல்லூரி தத்தெடுத்துள்ளது‘என்றார்.நிகழ்ச்சிக்கு பின்னர் வீரமுத்துவேல் நிருபர்களிடம் கூறுகையில், ‘இப்போதுள்ள மாணவர்கள் அனைவரும் வேலை தேடுபவர்களாக இல்லாமல் மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். இப்போது விண்வெளியில் ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளது.

விண்வெளியில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கட்ரானிக்ஸ், சாப்ட்வேர் போன்ற அனைத்து இன்ஜினியர்களும் தேவைப்படுகிறார்கள். அவர்கள் மட்டுமின்றி மருத்துவர்களும் இதற்கு தேவைப்படுகிறார்கள். எனவே மாணவர்கள் படிக்கும்போது நன்றாக படிக்க வேண்டும்,’ என்றார். இந்த பட்டமளிப்பு விழாவில் துறைவாரியாக முதலிடம் வென்ற 39 மாணவர்களுக்கு, ரூ.45 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இளநிலை மற்றும் முதுநிலை என மொத்தம் 1131 மாணவர்கள் பட்டம் பெற்றனர். விழாவில்,ஸ்ரீசாய்ராம் கல்வி குழும தலைவர் கலைச்செல்வி லியோ முத்து, இயக்குநர் ரேவதி சாய் பிரகாஷ், கல்லூரி முதல்வர் ராஜா, கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பிரேமானந்த், உயர் அலுவலர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Srisairam Engineering College Convocation Ceremony ,ISRO ,Tambaram ,Srisairam Engineering College ,West Tambaram ,Sriliyomuthu Indoor Stadium ,Chief Executive Officer ,Arima Sai Prakash Liyomuthu ,Srisairam Engineering ,College ,ISRO Scientist ,Veeramuthuvel ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்