×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 மாத உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்ட விவசாய சங்க தலைவர்

சண்டிகர்: விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க அரசு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், விவசாயியுமான ஜக்ஜித் சிங் தல்லேவால் கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார். இதுதொடர்பாக ஒன்றிய வேளாண் அமைச்சக இணை செயலாளர் பிரிய ரஞ்சன் தலைமையிலான ஒன்றிய அரசின் அதிகாரிகள் குழுவினர், கடந்த ஜனவரி 20ம் தேதி ஜக்ஜித் சிங் தல்லேவால் உள்பட விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள் கோரிக்கை குறித்து பிப்ரவரி 14ம் தேதி சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதையேற்று மருத்துவ சிகிச்சை பெற தல்லேவால் சம்மதம் தெரிவித்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தல்லேவால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். இதைத்தொடர்ந்து ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், ஒன்றிய ரயில்வே இணையமைச்சர ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் தல்லேவாலை சந்தித்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் 131 நாள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொள்வதாக ஜக்ஜித் சிங் தல்லேவால் தெரிவித்துள்ளார். பஞ்சாபின் பதேகர் சாஹிப் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தல்லேவால், “ உங்கள் உத்தரவை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொள்கிறேன். அதேசமயம் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகள் தொடரும்” என்று கூறினார்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 மாத உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்ட விவசாய சங்க தலைவர் appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,Jagjit Singh Thallewal ,Samyukta Kisan Morcha ,Dinakaran ,
× RELATED நாட்டின் விடுதலைக்காக போராடிய...