×

நடப்பாண்டில் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது; அழிந்து வரும் நிலையில் உள்ள பாரூ கழுகுகள் மீட்டெடுக்கப்படும்: வனத்துறை தகவல்

சென்னை: அழிந்து வரும் நிலையில் உள்ள பாரூ கழுகுகள் மீட்டெடுக்கப்படும் என்று தமிழ்நாடு வனத்துறை தெரிவித்துள்ளது. இயற்கை விவசாயம் மற்றும் கிராமப்புற சூழல்களில் பாரூ கழுகுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக கரிம கழிவுகளை மறு சுழற்சி மூலம் அகற்றுவதில் துப்புரவாளர்களாக பங்கு வகிக்கின்றன. வெண்முதுகு பாரூ கழுகு, நீண்ட மூக்கு பாரூ கழுகு மற்றும் செம்முக பாரூ கழுகு ஆகிய 3 வகை பாரூ கழுகுகளின் எண்ணிக்கை கடந்த 30 வருடங்களில் குறைந்து காணப்பட்டதால் அவை அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பாரூ கழுகுகளை பாதுகாப்பதற்காக டைக்ளோபெனாக் மற்றும் நிம்சுலைடு ஆகிய கால்நடை மருந்துகளை தடை செய்தது மட்டுமல்லாமல் வாழ்விடங்களை பாதுகாத்தல் மற்றும் வருடாந்திர பாரூ கழுகளின் எண்ணிக்கையை கண்காணித்தல் போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பாரூ கழுகுகள் கணக்கெடுப்பு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் நடத்தப்பட்டது.

இந்த கணக்கெடுப்பை தமிழ்நாடு வனத்துறை முன்னெடுத்து, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநில வனத்துறையுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெல்லை வன உயிரின சரணாலயம், கேரளாவில் வயநாடு வனவிலங்கு சரணாலயம் மற்றும் கர்நாடகாவில் பந்திப்பூர் புலிகள் காப்பகம், பிலிகிரி ரங்கசாமி கோயில் புலிகள் காப்பகம் மற்றும் நாகர்ஹோலே புலிகள் காப்பகம் ஆகிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

நிலப் பரப்பளவில் நடத்தப்படும் 3வது ஒருங்கிணைந்த பாரூ கழுகுகளின் கணக்கெடுப்பு கடந்த பிப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆகிய 2 நாட்கள் நடந்தது. இந்த கணக்கெடுப்பு காட்சி கோண எண்ணிக்கை முறையில் மூன்று மாநிலங்களிலும் மொத்தம் 106 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 157 பாரூ கழுகுகள் மதிப்பிடப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கையில் அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகிறது.

* வெண்முதுகு பாரூ அதிகம்
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநில வனத்துறையுடன் ஒருங்கிணைந்து காட்சி கோண எண்ணிக்கை முறையில் 106 இடங்களில் பாரூ கழுகுகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் 33 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. 2023-24ம் ஆண்டில் 320 ஆக இருந்த பாரூ கழுகுகளின் எண்ணிக்கை நடப்பாண்டில் மொத்தம் 390 ஆக உயர்ந்துள்ளது.

இது நிலப்பரப்பில் கழுகுகளின் எண்ணிக்கையில் நிலையாக அதிகரித்து வருவதை குறிக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 157 பாரூ கழுகுகள் மதிப்பிடப்பட்டுள்ளன. இதில் அதிகப்படியாக வெண்முதுகு பாரூ கழுகு 110 எண்ணிக்கையாக பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நீண்ட மூக்கு பாரூ கழுகு 31, செம்முக பாரூ கழுகு 11 மற்றும் எகிப்தியன் பாரூ கழுகு 5 எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டது.

* பாரூ கழுகுகளின் இனப்பெருக்கத்திற்கு இன்றியமையாத இடமாக முதுமலை புலிகள் காப்பகம் திகழ்கிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் 8 இடங்களில் மொத்தம் 60 கூடுகள் செயலில் உள்ளது காணப்பட்டது. அதில் பாரூ கழுகுகளின் எண்ணிக்கை 120 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் வெண்முதுகு பாரூ கழுகு (108) அதனை தொடர்ந்து நீண்ட மூக்கு பாரூ கழுகு (10) மற்றும் செம்முக பாரூ கழுகு (2) உள்ளது. இந்த கணக்கெடுப்பின்போது மொத்தம் 34 பாரூ கழுகுகளின் குஞ்சுகள் பதிவு செய்யப்பட்டது. செம்முக பாரூ கழுகின் கூடு தென்னிந்தியாவில் முதல் முறையாக முதுமலை புலிகள் காப்பகத்தில் பதிவு செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.

The post நடப்பாண்டில் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது; அழிந்து வரும் நிலையில் உள்ள பாரூ கழுகுகள் மீட்டெடுக்கப்படும்: வனத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Chennai ,Tamil Nadu Forest Department ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...