×

மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய பக்தி நூல்கள் கூடுதலாக 100 கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரால் இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப்பிரிவு தொடங்கப்பட்டு, பரவசமூட்டும் பக்தி இலக்கியங்கள், தலபுராணங்கள், அருட்பணி செய்த அருளாளர்களின் வரலாறுகள், கோயில் கலை நூல்கள், சிலை நூல்கள், காவிய நூல்கள், ஓவிய நூல்கள், தொன்மை வாய்ந்த பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், இறையடியார்களின் பொன்மொழிகள், மெய்யைப் போதித்து, மெய்யைக் காக்கும் சித்தர் நூல்கள் என அரிய பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு இதுவரை இரண்டு கட்டங்களாக 216 பக்தி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பக்தி நூல்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 103 கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்களும் ஆணையர் அலுவலகத்தில் ஒரு விற்பனை நிலையமும் தொடங்கப்பட்டு நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. முதல்வர் தலைமையில் 27.2.2024ல் நடந்த அறநிலையத்துறை ஆலோசனை குழுவின் இரண்டாவது கூட்டத்தில், “இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக வெளியீடுகளை விற்பனை செய்ய 103 கோயில்களில் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கூடுதலாக 100 கோயில்களில் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை செயல்படுத்திடும் வகையில் 100 கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையங்களை முதல்வர் நேற்று திறந்து வைத்தார். கோயில் புத்தக விற்பனை நிலையங்கள் துறையின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்திருப்பதோடு, அவை அறிவுசார் மையங்களாகவும் திகழ்ந்து வருவது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் ஹரிப்ரியா, ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய பக்தி நூல்கள் கூடுதலாக 100 கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil ,Nadu ,Hindu Religious and Endowments Department ,
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...